அமீரக சட்டங்கள்

UAE: வெளிநாடுகளிலிருந்து ஒர்க் பெர்மிட், விசிட்டில் வந்தவர்களை வேலையில் அமர்த்த கூடாது.. தனியார் நிறுவனங்களுக்கு MOHRE அறிவுறுத்தல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக வேலை கிடைத்து நிறுவனத்தில் பணிபுரிய ஆரம்பிக்கும் நபருக்கு ரெசிடென்ஸி விசா கிடைக்காமல் இருந்தாலும் அதற்கான செயல்முறை நடந்து கொண்டிருக்கும் போதே நிறுவனங்களில் வேலை பார்ப்பது ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சில நேரங்களில் விசிட் விசாவிலேயே இருந்து கொண்டே வேலை பார்க்க சொல்லும் நிறுவனங்களும் இருக்கின்றன. தொழிலாளர்களும் விசா கிடைக்கும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே பணிபுரிந்தால் அந்த நாட்களுக்கான சம்பளம் வருமென கருதி வேலை புரிந்து வருகின்றனர்.

இவர்களை எச்சரிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி அமீரகத்தில் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்திடம் (GDRFA) இருந்து தங்களுடைய ரெசிடென்ஸ் விசா பெறப்பட்டாலன்றி, தனியார் நிறுவனங்களால் புதிய ஊழியர்களைக் கொண்டு வேலையைத் தொடங்க முடியாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரெசிடென்ஸி நடைமுறைகளை நிறைவு செய்வதற்காக ஆரம்பத்தில் பணி அனுமதி (work permit) புதிய தொழிலாளருக்கு தற்காலிகமாக மட்டுமே வழங்கப்படுவதால், ஆரம்ப பணி அனுமதிகளைப் பெறுவதன் அடிப்படையில் நிறுவனங்கள் தங்கள் புதிய தொழிலாளர்களை வைத்து வேலையைத் தொடங்கக் கூடாது என்று அமைச்சகம் அதன் இணையதளத்தில் விளக்கியுள்ளது.

இது குறித்த செய்தியில் ஒரு நபருக்கு நாட்டிற்குள் பணிபுரிய அனுமதி வழங்கப்படும் போது, ​​அந்த நாட்டுக்குத் தேவையான தொழில்முறைத் தகுதி அல்லது கல்வித் தகுதிகளை அவர் பெற்றிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல் வேலை அனுமதியின் கீழ் வெளிநாட்டிலிருந்து ஒரு வெளிநாட்டு தொழிலாளியை அழைத்து வர விரும்பும் முதலாளி, “ஒதுக்கீட்டை (quota)” பெறுவதற்கான கோரிக்கையுடன் அமைச்சகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், பின்னர் அவர் தொழிலாளருக்கு அளிக்கும் வேலை வாய்ப்பை அச்சிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வேலை வாய்ப்பில் இரு தரப்பினரின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய விரிவான விளக்கம் இருக்க வேண்டும் என்பதோடு ஆவணம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டு, அவரது சொந்த நாட்டில் உள்ள தொழிலாளிக்கு அல்லது சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு ஆன்லைனில் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் தொழிலாளி அதைப் பார்த்து, கையொப்பம் அல்லது கைரேகை மூலம் தனது ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அரபு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கும் என அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொழிலாளி புரிந்துகொள்ளும் மூன்றாவது மொழியிலும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொழிலாளர் உறவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் அனைத்து விவரங்களும் அடங்கிய பின்னிணைப்பும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை அனுமதி பெற 5 நிபந்தனைகள்

ஒரு நபரை பணியமர்த்தும் முதலாளி அல்லது நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பணி அனுமதிக்கான விண்ணப்பங்களை அங்கீகரிக்க ஐந்து முக்கிய நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் உறுதிப்படுத்தியது. அவை:

1. நிறுவன உரிமையாளருக்கும் தொழிலாளிக்கும் இடையிலான பணி உறவைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினராலும் கையொப்பமிடப்பட்ட வேலை வாய்ப்பைச் சமர்ப்பித்தல்

2. தொழிலாளியிடம் வேறொரு நிறுவனத்தில் வேலை அனுமதி இல்லை என்பதைச் சரிபார்த்தல்

3. தொழிலாளரின் வயது 18 மற்றும் அதற்கு மேல் என்பதை உறுதி செய்தல்

4. நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு தொழிலாளருக்கு வேலை வழங்குதல்

5. ஒவ்வொரு தொழிலாளருக்கும் 3,000 திர்ஹம்ஸ் வங்கி உத்தரவாதத்தை வழங்குதல். இது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றின் மூலம் MoHRE இன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!