அமீரக செய்திகள்

UAE: ஒரு சில நொடிகள் போதும்.! பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற MOHAP அறிமுகம் செய்துள்ள புதிய வசதி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடிமக்களும், வெளிநாட்டவர்களும் அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (Ministry of Health and Prevention-MOHAP) அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை, இனி ஒரு சில கிளிக்குகளில் எளிமையாகவும், விரைவாகவும் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தால் (Ministry of Health and Prevention – Mohap) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தொலைத்த பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கு அல்லது மாற்றுவதற்கு தனிநபர்கள் அளிக்கும் கோரிக்கையை இணையதளம் ஏற்றுக்கொள்ளும் என்றும், மேலும் இணையதளம் மூலம் இறப்புகளைப் பதிவு செய்யும்போது, ​​உலக சுகாதார அமைப்பின் (WHO) தரநிலைகளின் அடிப்படையில், காரணங்களைப் பற்றிய துல்லியமான புள்ளிவிவரத் தரவை அமைச்சகம் (Mohap) வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது, நாடு முழுவதும் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய துல்லியமான பதிவுகளை பராமரித்தல், வாடிக்கையாளர் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் திறமையான சேவைகளை வழங்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத் துறையின் உதவி துணைச் செயலாளர் டாக்டர் ஹுசைன் அப்துல் ரஹ்மான் அல் ராண்ட் அவர்கள் கூறுகையில், பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்வதற்கான மின்னணு சேவைகளை மறுபரிசீலனை செய்து நவீனமயமாக்குவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொது சுகாதார மற்றும் தடுப்புத் துறையின் இயக்குநர் டாக்டர் நடா அல் மர்சூகி அவர்கள் பேசுகையில், ஆட்டோமேஷன் திட்டங்களை மேம்படுத்துவதில் புதிய மின்னணு அமைப்பு முக்கியப் பங்கு வகிப்பதாகவும், அத்துடன் இது பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான சமீபத்திய தரவுகளுடன் மக்கள் பதிவேட்டை புதுப்பிக்க பெடரல் ஆணையத்துடன் மின்னணு இணைப்பை நிறுவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!