அமீரக செய்திகள்

துபாய் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு விற்கப்பட்ட ‘ஆடம்பர தனியார் வில்லா’.. இந்திய மதிப்பில் ரூ.560 கோடி..!!

ஆடம்பர வாழ்க்கைக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் பெயர் பெற்ற துபாயில் முற்றிலும் தனிப்பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட ஆடம்பர தனியார் வில்லா ஒன்று சுமார் 280 மில்லியன் திர்ஹம்களுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 560 கோடி என்ற இமாலய விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

துபாயில் ஆடம்பர வில்லாக்களின் இருப்பிடமாக கருதப்படும் பாம் ஜுமைராவில் கட்டப்பட்ட ஒரு புதிய 10 படுக்கையறைகளை கொண்ட ஆடம்பர வில்லா ஒன்று தான் இத்தகைய பெருந்தொகைக்கு விற்கப்பட்டதாக துபாயில் உள்ள சொகுசு ரியல் எஸ்டேட் ஏஜென்சியான பெல்லிவியூ ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் துபாயில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஆடம்பர வில்லா என்ற முந்தைய நீண்ட கால சாதனையை இது முறியடித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2015 ம் ஆண்டு 185 மில்லியன் திர்ஹம் தொகைக்கு விற்க்கப்பட்டதே துபாயில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட ஆடம்பர வில்லவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ள இந்த வெள்ளை நிற வில்லாவானது, அதிநவீன வாழ்க்கை இடம், ஏழு நட்சத்திர ஸ்பா ஹோட்டல் வசதிகள், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், சலூன் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலியன் மார்பில், உயர் ரக ஃபர்னிச்சர்ஸ் போன்ற வசதிகளுடன் சுமார் 33,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த வில்லாவானது தனிப்பயன்பாட்டிற்காக 70 மீட்டருக்கும் அதிகமான தனியார் கடற்கரையையும் கொண்டுள்ளது.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் பாம் ஜுமேராவில் உள்ள ஒரு டிரிப்ளெக்ஸ் பென்ட்ஹவுஸ் ஆடம்பர வில்லா ஒன்று 180 மில்லியன் திர்ஹம்களுக்கு விற்கப்பட்டது. துபாயை பொறுத்தவரை ஆடம்பர சொத்து பரிவர்த்தனைகளில் பாம் ஜுமேரா தான் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் இங்கு இந்தியாவின் பெரிய தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்களுக்கும் சொந்தமான ஆடம்பர வில்லாக்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!