ரியாத்: $22.5 பில்லியன் செலவில் உலகின் மிகப்பெரிய போக்குவரத்து திட்டம்.. முதல் கட்டத்தை தொடங்கிய சவூதி அரேபியா..!!

சவுதி அரேபியாவில் அறிவிக்கப்பட்ட கிங் அப்துல் அஜீஸ் பொது போக்குவரத்து திட்டத்தின் ஒரு பகுதியான ரியாத் பேருந்து சேவையின் முதல் கட்டம் தொடங்கப்படுவதாக ரியாத் நகரத்திற்கான ராயல் கமிஷன் அறிவித்துள்ளது. மேலும் இது ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் மிகவும் வசதியான போக்குவரத்து வசதியை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏறத்தாழ $22.5 பில்லியன் செலவில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டம், உலகின் மிகப்பெரிய பொது போக்குவரத்து திட்டமாக கருதப்படுகிறது. மேலும் ரியாத்தில் வசிக்கும் பொதுமக்கள் பயணங்களுக்கு தனியார் கார்களை சார்ந்திருப்பதை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் இந்த பேருந்து சேவை முக்கியப் பங்காற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரியாத்தில் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட மூலோபாய திட்டங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் 633 பஸ் ஸ்டேஷன்ஸ் மற்றும் பஸ் ஸ்டாப் வழியாக பயணிகளுக்கு சேவை செய்ய 340க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
மேலும், இந்த பேருந்து நெட்வொர்க்கில் சுமார் 800க்கும் மேற்பட்ட பேருந்துகள் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இதன் ஐந்து கட்டங்களும் முழுமையாக செயல்படும் போது மொத்தம் 1,900 கிமீ தூரத்திற்கு இந்த பேருந்து சேவை நீண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ரியாத் பேருந்துகளின் இயக்க நேரம் காலை 7:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 3:30 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ரியாத் பேருந்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணமாக 4 ரியால்கள் எனவும், மேலும் இது இரண்டு மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் எனவும் கூறப்பட்டுளளது. ஆகவே, பயணிகள் இரண்டு மணி நேரத்திற்குள் அதே டிக்கெட்டை பயன்படுத்தி மற்றொரு பேருந்தில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர பொது போக்குவரத்து திட்டத்தின் கீழ், ரியாத் மெட்ரோ திட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், மொத்தம் 176 கிமீ தூரத்திற்கு ஆறு தடங்களுடன், 85 ரயில் நிலையங்கள் மற்றும் ஆறு முக்கிய மெட்ரோ பாதைகளுடன் இயங்கும் ரியாத் மெட்ரோவின் வழித்தடம் தலைநகரான ரியாத்தை அனைத்து திசைகளிலிருந்தும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
சவுதி அரேபியாவின் போது பொது போக்குவரத்து திட்ட பணிகளில் தற்போது முதல் கட்டம் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான பொது போக்குவரத்து திட்டம் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.