அமீரக சட்டங்கள்

உங்கள் வேலைக்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் மற்றொரு நிறுவனத்தில் சேரலாமா..?? அமீரக சட்டம் சொல்வது என்ன….??

நீங்கள் ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறுகிறீர்கள் என்றால், முதலில் ஒரு தொழிலாளியாக உங்களது பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றியிருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அதாவது ஒரு வேலையிலிருந்து விலகுவதற்கு முன்பு முறையாக நோட்டீஸ் பீரியடை (notice period) நீங்கள் வழங்கவில்லை என்றால், நீங்கள் தொழிலாளர் தடையை (labour ban) எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (Ministry of Human Resources and Emiratisation – MOHRE) தொழிலாளர் உரிமைகள் மற்றும் புதிய நிறுவனத்தில் சேர மூன்று சூழ்நிலைகள் குறித்து அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் ஒரு பதிவின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று சூழ்நிலைகள்:

  • உங்கள் வேலை ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு புதுப்பிக்கப்படாவிட்டால்.
  • பணி தொடர்பான காரணமின்றி ஒப்பந்தத்தை முதலாளி நிறுத்தினால்
  •  தொழிலாளர் சட்டம் மற்றும் அதைச் செயல்படுத்தும் விதிமுறைகளின்படி, (பிரிவு 42 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை முடித்தல், பிரிவு 45முன்னறிவிப்பு இல்லாமல் வேலையை விட்டு வெளியேறுதல்) ஒப்பந்த காலத்தின் போது நிறுத்தப்பட்டால்

வேலை ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு புதுப்பிக்கப்படாத போது

உங்களது வேலைக்கான ஒப்பந்தங்கள் வரையறுக்கப்பட்டவை அல்லது வரம்பற்றவை என வகைப்படுத்தப்பட்டாலும், புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, ஒப்பந்தங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முடிக்கப்பட வேண்டும். இது மூன்று ஆண்டுகளுக்கு அல்லது குறுகிய காலத்திற்கு ஒப்பந்தங்களை நீட்டிக்கலாம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறை புதுப்பிக்கலாம் என்று கூறுகிறது என்பதை மனதில் கொள்வது அவசியம். எனினும், அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவின்படி, உங்கள் வேலை ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு, புதுப்பிக்கப்படாமல் இருந்தால், நீங்கள் புதிய நிறுவனத்தில் சேரலாம்.

வேலை தொடர்பான காரணமின்றி ஒப்பந்தத்தை முதலாளி நிறுத்தினால்

உங்களின் பணியுடன் தொடர்பில்லாத காரணங்களுக்காக, உங்களை வேலையை விட்டு வெளியேறும்படி உங்களிடம் கூறினால், உங்கள் ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் நீங்கள் வேறொரு நிறுவனத்தில் சேரலாம். மேலும், நீங்கள் உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பினால், உங்கள் பணிக்கொடை(gratuity) மற்றும் சேவைப் பலன்களைப் (service benefits) பெறுதல், ஒப்பந்தத்தை முடிப்பதற்கான 30 நாள் நோட்டீஸ் மற்றும் திருப்பி அனுப்பும் டிக்கெட் போன்ற சில உரிமைகளைப் பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் சட்டம் மற்றும் அதைச் செயல்படுத்தும் விதிமுறைகளின்படி, (பிரிவு 42 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை முடித்தல், பிரிவு 45முன்னறிவிப்பு இல்லாமல் வேலையை விட்டு வெளியேறுதல்) ஒப்பந்த காலத்தின் போது நிறுத்தப்பட்டால்

பிரிவு 42 கூறும் சட்டம்:

அமீரக தொழிலாளர் சட்டம் பிரிவு 42, வேலை ஒப்பந்தத்தை முடிக்கக் கூடிய ஒன்பது நிபந்தனைகளை உள்ளடக்கியுள்ளது. அவை:

  1. இரு தரப்பினரின் பரஸ்பர எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின் மூலம் முடிக்கலாம்.
  2. ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடையும் நிலையில், அது நீட்டிக்கப்படாவிட்டால் அல்லது அதன் விதிகளின்படி புதுப்பிக்கப்படாவிட்டால் ஒப்பந்தத்தை முடிக்கலாம்.
  3. எந்தவொரு தரப்பினரின் விருப்பத்தின் பேரிலும், ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தம் மற்றும் அறிவிப்புக் காலத்தை (notice period) முடிப்பது தொடர்பாக இந்த ஆணை-சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு முடிக்கலாம்.
  4. முதலாளியின் மரணம்
  5. மருத்துவமனை அளித்துள்ள ஒரு சான்றிதழின் சாட்சியத்தின்படி, தொழிலாளியின் இறப்பு அல்லது நிரந்தர முழு ஊனம்.
  6. தொழிலாளி மூன்று மாதங்களுக்கு குறையாத காலத்திற்கு காவலில் வைக்கப்பட்ட தண்டனைக்கு இறுதி உத்தரவின் மூலம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டாலும் ஒப்பந்தம் முடிவடையும்.
  7. நிறுவனத்தை நிரந்தரமாக மூடுதல்.
  8. எக்ஸிகியூட்டிவ் ரெகுலேஷன்ஸ் மற்றும் அமீரகத்தில் அமலில் உள்ள சட்டங்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகளின்படி, முதலாளி திவாலாகிவிட்டால் அல்லது பொருளாதார காரணங்களுக்காக தொழிலில் தொடர முடியாமல் போனால்.
  9. முதலாளியின் கட்டுப்பாட்டிற்கு வெளியே எந்தவொரு காரணத்திற்காகவும் பணி அனுமதியை புதுப்பிப்பதற்கான நிபந்தனைகளை தொழிலாளர் சந்திக்கவில்லை என்றால் முடிக்கலாம்.

பிரிவு 45 கூறும் சட்டம்:

ஒரு தொழிலாளி எந்த அறிவிப்பும் இன்றி வேலையை விட்டு விலகினாலும் அவரது அனைத்து உரிமைகளையும் பெறுவதற்கான நான்கு சூழ்நிலைகளை இந்த பிரிவு உள்ளடக்கியுள்ளது. அதன்படி, தொழிலாளர் தாக்குதல் அல்லது துன்புறுத்தல் சம்பவங்களுக்கு ஆளானால் அல்லது பணியிடமானது தொழிலாளியின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் சட்டத்தின்படி, முதலாளி தனது கடமைகளை மீறும் சூழ்நிலைகள் இதில் அடங்கும்.

பிரிவு 45 இன் வழக்குகள் எதுவும் உங்களுக்குப் பொருந்தாத பட்சத்தில், நீங்கள் வேலையை விட விரும்பினால் உங்கள் முதலாளிக்குத் தெரிவிக்கும் நோட்டீஸை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தின் 43 வது பிரிவின்படி, ஒரு முழுநேர ஊழியர், தங்கள் வேலையை ராஜினாமா செய்ய விரும்பினால், 30 முதல் 90 நாட்களுக்குள் அறிவிப்புக் காலத்தை (notice period) வழங்க வேண்டும். உங்கள் வேலை ஒப்பந்தம் உங்கள் முதலாளிக்கு வழங்க வேண்டிய நோட்டீசைக் குறிப்பிடும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!