அமீரக செய்திகள்

மருத்துவமனைகளின் லோகோவைப் பயன்படுத்தி மோசடி!! போலியான வேலை வாய்ப்பை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என அறிவுறுத்தல்….

அபுதாபியில் உள்ள மருத்துவமனைகள், தங்கள் மருத்துவமனைகளின் பெயரில் வேலை தேடுபவர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் சலுகைகளுடன் போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, முசாஃபா தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள மில்லினியம் மற்றும் ஃபீனிக்ஸ் மருத்துவமனைகள், மருத்துவமனைகளின் பெயரில் மின்னஞ்சல்கள் மூலம் போலியான வேலை வாய்ப்புகளை பெற்றதாக வேலை தேடுபவர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த மருத்துவமனைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரி ஒருவர், இவ்வாறு மருத்துவமனைகளின் பெயரில் மோசடி செய்பவர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மில்லேனியம் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் வி.ஆர். அனில் குமார் என்பவர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், இந்த மோசடி செய்பவர்கள் மருத்துவமனைகளின் லோகோவைப் பயன்படுத்தி, வேலை வாய்ப்புகள், நியமனக் கடிதங்களை வேலை தேடுபவர்களுக்கு அனுப்பி தவறாக வழி நடத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆவணத்தில் உள்ள வலைத்தளம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் போலவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக, அதிகாரப்பூர்வ இணையதளம் www.phoenixhospital.ae ஆக இருக்கும் போது, ​​நியமனக் கடிதத்தில் உள்ள போலியான ஐடி www.phoenixhospitalae.com/ என்று இருக்கும். அதுமட்டுமில்லாமல், இன்றைய டிஜிட்டல் சகாப்தத்தில், இதுபோன்ற வேலைவாய்ப்பு மோசடிகள் முதலாளிகளுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் கற்பனையான சம்பளம் மூலம் வேலை தேடுபவர்களை கவர்ந்திழுப்பதும் தெரியவந்துள்ளது. அதாவது 5,000 திர்ஹம் சம்பளம் வழங்கக்கூடிய பதவிக்கு 20,000 திர்ஹம் தொகையை மாத ஊதியமாக போலி ஒப்பந்தம் வழங்குவதாகக் குறிப்பிட்டிருக்கும். எனவே, தீவிரமாக வேலை தேடும் நபர்கள் இந்த மோசடிகளால் பாதிக்கப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

இதுவரை இந்த மோசடி செயலால் எத்தனை பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்ற விவரம் எங்களுக்குத் தெரியாது என்று கூறிய அவர், தனிப்பட்ட நேர்காணல் சுற்று இல்லாமல் நாங்கள் வேலைவாய்ப்பு கடிதத்தை வழங்க மாட்டோம் என்றும் ஆட்சேர்ப்பு இயக்கத்தின் போது நாங்கள் எந்த கட்டணத்தையும் வசூலிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, யாரேனும் தங்கள் வேலைவாய்ப்பு விசாவைச் செயல்படுத்துவதற்காக பணத்தைப் பரிமாற்றம் செய்யக் கோரும் சந்திப்புக் கடிதத்தைப் பெற்றால், அவர்கள் [email protected] அல்லது [email protected] ஆகியவற்றில் எது பொருந்துகிறதோ அதைத் தொடர்புகொள்ளலாம் என்று மருத்துவமனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Related Articles

Back to top button
error: Content is protected !!