அமீரக செய்திகள்

துபாய்: பயணம் முதல் பெட்ரோல் வரை.. 25 திர்ஹம்ஸ் நோல் கார்டில் இத்தனை வசதிகளா..?

துபாயில் நோல் கார்டுகள் பெரும்பாலும் துபாய் மெட்ரோ அல்லது பொதுப் பேருந்திற்கு பணம் செலுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர மற்ற பொதுப் போக்குவரத்து வசதிகளிலும் மற்றும் பொது இடங்களுக்குச் செல்லவும் நோல் கார்டுகளை கட்டண முறையாகப் பயன்படுத்தலாம்.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) படி, துபாயைச் சுற்றியுள்ள 2,000 க்கும் மேற்பட்ட கடைகளில் நோல் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம். அவற்றில் நீலம், வெள்ளி அல்லது தங்க நிற அட்டை இருந்தால் மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, அவ்வாறு நோல் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தக்கூடிய சில இடங்களின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

1. பொது பார்க்கிங்:

நீங்கள் வெளியில் செல்லும்போது உங்களிடம் போதுமான சில்லறை இல்லை அல்லது உங்கள் மொபைல் ஃபோனில் இருப்பு இல்லை என்றால், பார்க்கிங் கட்டண இயந்திரங்கள் மூலம் பொது பார்க்கிங்கிற்கு பணம் செலுத்த உங்கள் நோல் கார்டைப் பயன்படுத்தலாம். அதற்கு முதலில் நீங்கள் கார்டு ஸ்லாட்டில் நோல் கார்டைச் செருகி, உங்கள் பிளேட் குறியீடு மற்றும் எண் போன்றவற்றை உள்ளிடவும். அதன் பிறகு, பார்க்கிங் காலத்தைத் தேர்ந்தெடுத்தால், நோல் கார்டின் இருப்பில் இருந்து தொகை கழிக்கப்படும்.

2. டாக்ஸி கட்டணம்:

பேருந்து, துபாய் மெட்ரோ உட்பட RTA டாக்ஸி போன்ற துபாயில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்திற்கும் நோல் கார்டைப் பயன்படுத்த முடியும். நோல் கார்டைப் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு 2019 ஆம் ஆண்டில், துபாயில் உள்ள பொது டாக்ஸிகள் அனைத்திலும் பாயின்ட் ஆஃப் சேல் (POS) சாதனங்களையும் நிறுவி முடித்ததாக RTA அறிவித்துள்ளது. அதன்படி துபாயில் உள்ள அனைத்து பொது டாக்சஸிகளிலும் பயணிகள் கார்டைப் பயன்படுத்தலாம்.

3. பாம் மோனோரயில் (Palm Monorail):

அக்டோபர் 25, 2022 முதல் பயணிகள் பாம் மோனோரயில் பயணத்திற்கு தங்கம், வெள்ளி அல்லது நீல நிற அட்டைகளைப் பயன்படுத்தலாம் என்று RTA அறிவித்துள்ளது. இதற்கு முன்பு மோனோரயிலில் பயணிக்க தனி டிக்கெட் வாங்க வேண்டும்.

4. பொது பூங்காக்கள் மற்றும் எதிஹாட் அருங்காட்சியகம்:

நோல் கார்டுகளைப் பொதுப் போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பொது பூங்காக்கள் மற்றும் எதிஹாட் அருங்காட்சியகத்தில் நுழைவதற்கும் பயன்படுத்த முடியும். துபாயில் உள்ள முக்கிய பொதுப் பூங்காக்கள் பணம் மற்றும் நோல் கார்டுகளை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் ஜபீல் பூங்கா நோல் கார்டுகளை மட்டுமே அனுமதிக்கிறது. பொதுப் பூங்காக்களுக்குள் நுழைவதற்கான கட்டணம் ஒரு நபருக்கு 3 முதல் 5 திர்ஹம் வரை செலவாகும்.

5. மளிகை பொருட்கள், உணவகங்கள் மற்றும் மருந்துகளுக்கு பணம் செலுத்த:

வாடிக்கையாளர்கள் மளிகைப் பொருட்கள், மருந்துகள் அல்லது உணவு போன்றவற்றை வாங்குவதற்கும் நோல் கார்டைப் பயன்படுத்தலாம். RTA உடன் இணைந்து 2,000 உணவு மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வாடிக்கையாளர்கள் நோல் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கின்றன.

மேலும், தினசரி அத்தியாவசியப் பொருட்களுக்கு பணம் செலுத்த நீங்கள் நோல் கார்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் அதைப் பயன்படுத்தக்கூடிய அதிகபட்சத் தொகை 200 திர்ஹம் என்பது குறிப்பிடத்தக்கது.  https://www.rta.ae/wps/portal/rta/ae/public-transport/nol/nol-merchants இந்த லிங்க்கைப் பயன்படுத்தி நோல் கார்டுகளை ஏற்கும் அனைத்து சில்லறை விற்பனைகங்கள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் கன்வீனியன்ஸ் ஸ்டோர்களை காணலாம்.

6. எரிபொருள் நிலையம்:

துபாய் முழுவதும் உள்ள அனைத்து ENOC எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருள் நிரப்புவதற்கு வாகன ஓட்டிகள் தங்கள் நோல் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் மற்றும் கொள்முதல் செய்யலாம் என்று 2017 ஆம் ஆண்டில், RTA அறிவித்துள்ளது.

7. வாகனப் பதிவு: 

RTA இணையதளத்தின்படி, வாகன ஓட்டிகள் தஸ்ஜீல் மையங்களில் தங்கள் வாகனப் பதிவு மற்றும் வாகன சோதனைக்கு பணம் செலுத்த தங்கள் நோல் கார்டைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!