வளைகுடா செய்திகள்

உலக நாடுகள் வியந்து பார்க்கும் NEOM திட்டம் பற்றி நீங்கள் அறிந்திராத பல சுவாரஸ்ய தகவல்கள்.. ஒரு சிறப்பு பார்வை..!!

ஒரு மனிதன் ஒரு நாட்டை உருவாக்கினான், சொர்க்கத்தை உருவாக்கினான் என்ற கதையை நம் வரலாற்றில் தான் படித்திருப்போம். ஆனால் இன்று உலக வரலாறு வாயை பிளக்கும் அளவிற்கு ஒரு திட்டத்தை தான் சவுதி அரேபியா அறிவித்திருக்கின்றது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இதுவரை உலக நாடுகள் யாருமே செய்யாத முன் முயற்சியாக 170 கிலோமீட்டர் நீளத்தினை ஒரே நேர்கோட்டில் கடக்க கூடிய வகையில் ஒரு ஸ்மார்ட் சிட்டியினை உருவாக்கும் அறிக்கையினை வெளியிட்டார். இதன் சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றையும் படிக்கும் பொழுதே இப்படியும் நாட்டையும் உருவாக்கலாமா? என்று மெய்சிலிர்க்கும். அதன் சிறப்பு அம்சங்களை ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்.

உலக அளவில், எரிபொருளுக்கான எண்ணெய் வைத்திருக்கும் இரண்டாவது பெரிய நாடு சவுதி அரேபியா. சவுதி அரேபியா இல்லையென்றால் உலகத்தில் யாருமே வாகனங்களை ஓட்ட முடியாது என்றே சொல்லலாம். ஆனால் கையிருப்பில் இருக்கும் எண்ணெய்கள் இன்னும் 278 ஆண்டுகளில் தீர்ந்து விடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அப்படி எண்ணெய் வளம் தீரும் பட்சத்தில், எரிபொருள் நமக்கு கிடைக்காது. அப்படி என்றால் எல்லோரும் எலக்ட்ரிக் முறைக்கு மாற வேண்டும் அப்படி இல்லை என்றால் இயற்கை ஆற்றல் மூலங்களுக்கு மாற வேண்டும். இது ஒன்றே தீர்வு.எனவே நாட்டின் வருங்காலத்தை ஆராய்ந்து இளவரசர் எழுதிய திட்டம் தான் இந்த லைன் சிட்டி.

அமெரிக்க டாலரின் மதிப்பில் 550 பில்லியன் என கணக்கிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தினை 2030 ஆம் ஆண்டுக்குள் முடிப்பதற்கு சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. முழுக்க முழுக்க “ரெனீவபிள் எனர்ஜி”எனப்படும் மூலாதாரத்துடன் இந்த நகரமானது உருவாக்கப்படுகின்றதே இதன் சிறப்பு. நாட்டின் சுற்றுலாத்துறை, கல்வி, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் இவை எல்லாவற்றையும் ஒருசேர வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்வதே இந்த திட்டத்தின் சிறப்பியல்பு.

இந்த ஒட்டுமொத்த நகரத்திற்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் தான் Neom. ஏற்கனவே இந்த நகரத்திற்கான விமான நிலையம் ஆனது திறக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இந்த நகரத்தின் சிறப்பு என்னவென்றால் இதனை மூன்று அடுக்குகளாக அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது.

முதல் அடுக்கு:

இதன் மேல் அடுக்கு பாதசாரிகள் நடக்கும் லைன். இதில் எந்த வாகனங்களும் செல்லாமல் மனிதர்கள் நடப்பதற்கு மட்டுமே உபயோகப்படுத்தப்படும். இதில் பசுமையான மரங்கள் மற்றும் தாவரங்கள் மட்டுமே இருக்கும். நினைத்துப் பார்க்கவே ரம்யமாக இருக்கிறது அல்லவா.. கிட்டத்தட்ட பழங்கால உலகிற்கே நம்மை இது அழைத்துச் செல்லும்.

இரண்டாம் அடுக்கு:

இதற்கும் ஆழமாக போனால் இருக்கும் இரண்டாவது அடுக்கு தான் சர்வீஸ் லேயர். இங்கே மிகப்பெரிய ஐடி பார்க்குகள், ஹாஸ்பிடல்கள் மற்றும் மனிதர்கள் எப்போதும் பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை பயன்பாட்டில் இருக்கும்.

மூன்றாம் அடுக்கு:

அதற்கும் ஆழமாக போனால் இருக்கும் மூன்றாவது லேயர் தான் “ஸ்பைன் லேயர்”. இந்த லேயர் தான் இந்த திட்டத்தின் முதுகெலும்பு. அதற்குள் கண்ணுக்கு தெரியாத கிரிட் மூலமாக அல்ட்ரா ட்யூப் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிவேக மெட்ரோ ரயில் போன்ற ரயிலினை இயக்கலாம். இந்த ரயிலானது 170 கிலோமீட்டர் தூரத்தினை வெறும் 20 நிமிடங்களில் கடக்கும்.

யோசித்துப் பாருங்கள்.. இந்த திட்டம் கைகூடினால் வாகனங்களுக்கான தேவையே இருக்காது. அப்படி என்றால் எரிபொருளும் தேவைப்படாது, கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறும் வாய்ப்பும் இருக்காது. இந்த திட்டத்தை மேற்கொள்ளும் பொழுது மலைகள் எல்லாம் இடையில் வருமே அதை என்ன செய்யப் போகின்றார்கள், எப்படி கையாள்வார்கள் என்று கேட்டால் அதற்கும் ஒரு பிளான் வைத்திருக்கின்றது சவுதி அரேபியா.

மலைகள் எல்லாவற்றையும் சுற்றுலா மக்களை கவரும் விதமாக தீம் பாக்குகளாக மாற்றப் போவதே இதன் சிறப்பம்சம். இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள சுற்றுலா மக்களை ஈர்க்கலாம். உலகத்தில் இது போன்ற ஒரு இடமே இல்லை என்ற அளவிற்கு இதனை கொண்டு வர இருக்கின்றது சவுதி அரேபியா.

மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும், எளிதில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடமாகவும், முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில் நுட்பத்துடன் ஒரு நகரத்தை உருவாக்கி உலகத்திற்கே முன்மாதிரியாக இதனை கொண்டு வர வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கம்.

இந்த திட்டமானது சர்வதேச அளவில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை. மேலும் இந்த நகரம் திறக்கப்படும் பட்சத்தில் நாம் வேற்று கிரகத்திற்கு சென்றது போன்று ஒரு உணர்வு தான் ஏற்படும். கேட்க கேட்க மெய்சிலிர்க்க வைக்கும் இந்த நகரத்தினை காண்பதற்கு சவுதி அரேபியா மக்கள் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.

Related Articles

Back to top button
error: Content is protected !!