அமீரக செய்திகள்

அமீரகத்தின் புதிய விசா நடைமுறை: Free Zone விசாக்களின் செல்லுபடி காலம் குறைப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்படும் ஃப்ரீ ஸோன் விசாக்களின் (freezone visa) செல்லுபடியாகும் காலம் குறைக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமீரகத்தில் வழங்கப்பட்டு வரும் ஃப்ரீ ஸோன் விசாக்களின் செல்லுபடி காலம் மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீரகத்தில் இயங்கி வரும் டைப்பிங் சென்டர் ஏஜென்ட் மற்றும் வணிக ஆலோசகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விசாக்களுக்கான புதிய செல்லுபடியாகும் காலம் இந்த ஆண்டில் புதிய விசா சீர்திருத்தங்கள் வெளியிடப்பட்ட அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICP) வாடிக்கையாளர் பராமரிப்பு முகவர் கூறுகையில், “புதிய புதுப்பிப்புகளின்படி, ஃப்ரீஸோன் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மூன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது” என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அமீரகத்தில் பொதுவாக மெயின்லேண்ட் மற்றும் ஃப்ரீஸோன் என இரண்டு விதமான வகைகளில் தொழில் தொடங்குவதற்கான லைசென்ஸ் வழங்கப்படுகிறது. அதில் மெயின்லேண்ட் உரிமம் பெற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்காக  வழங்கப்பட்டு வரும் ரெசிடென்ஸ் விசாக்கள் இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் காலமும் ஃப்ரீஸோன்களில் உரிமம் பெற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படு வரும் ரெசிடென்ஸ் விசாக்கள் மூன்று ஆண்டுகள் செல்லுபடி காலமும் கொண்டதாக இருக்கும். ஆனால் தற்பொழுது அமீரக அரசு இந்த இரண்டு விசாக்களுக்குமே ஒரே செல்லுபடி காலத்தை அறிவித்துள்ளது.

இருப்பினும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஃப்ரீஸோன் விசாக்கள் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் புதிதாக வழங்கப்படும் விசாக்கள் இரண்டு வருட செல்லுபடி காலம் கொண்டதாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகமானது ஜபெல் அலி ஃப்ரீ ஸோன், துபாய் ஏர்போர்ட் ஃப்ரீஸோன், KIZAD ஃப்ரீஸோன் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட பல வகையான ஃப்ரீ ஸோன்களைக் கொண்டுள்ளது. மேலும் அவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிறுவனங்களின் முழு உரிமையை பெற அனுமதிக்கின்றன. அத்துடன் ஃப்ரீ ஸோன் அரசாங்க சேவைகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்களின் அடிப்படையில் வணிகம் செய்வதை எளிதாக்குகிறது. மேலும் சில சந்தர்ப்பங்களில் அலுவலக இடமும் தேவையில்லை என கூறப்படுகிறது.

அமீரகத்தில் அறிவிக்கப்பட்ட புதிய மேம்பட்ட விசா முறை அக்டோபர் 3 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் பலவகையான விசாக்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக திறமையான தொழிலாளர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு கிரீன் விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதனுடன் சேர்த்து விசிட் விசாக்கள பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, ஐந்து வருட பல நுழைவு சுற்றுலா விசா (multi entry tourist visa) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பான்சர் தேவையில்லை என்றும் இதன் மூலம் $4,000 வங்கி இருப்பு வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து 90 நாட்கள் தங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!