அமீரக செய்திகள்

விடுமுறைக்கு தாயகம் சென்றுவிட்டு துபாய் திரும்பிய குடியிருப்பாளருக்கு கிடைத்த அதிர்ச்சி..!! 20,179 திர்ஹம்ஸாக வந்த DEWA பில்..!!

துபாயில் உள்ள டமாக் ஹில்ஸ் 2 பகுதியில் (Damac Hills 2) வசிக்கும் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த டேவிட் ரிச்சர்ட் ஸ்போர்ஸ் (David Richard Spours) என்ற அமீரக குடியிருப்பாளருக்கு, துபாயின் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (Dewa) அனுப்பிய இ-மெயில் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதாவது, கோடை விடுமுறைக்கு இங்கிலாந்து சென்றுவிட்டு விடுமுறை முடிந்து அமீரகம் திரும்பிய ஸ்போர்ஸிற்கு ஆகஸ்ட் மாத Dewa பில் கட்டணமாக 20,179 திர்ஹம்களை செலுத்துமாறு அந்த இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து ஆணையத்திடம் கேட்டுள்ளார்.

அப்போது தான் தனது தோட்டத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக தண்ணீர் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது அவருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள விவரங்களின் படி, மின்சாரத்திற்கு 1,383.17 திர்ஹமும், துபாய் முனிசிபாலிட்டிக்கு 1,804.42 திர்ஹமும் மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீருக்கு மட்டும் 16,992.38 திர்ஹமும் அவர் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, இவ்வளவு தொகையையும் அவர் எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் செலுத்தியாக வேண்டும். இது பற்றி அவர் விவரிக்கையில், அவர் வீட்டின் தண்ணீர் தொட்டியில் உள்ள தவறான மிதவை வால்வு (float valve) காரணமாக, தண்ணீர் தொட்டி நிரம்பி 30 நாட்களுக்கு தொடர்ந்து கசிந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இதனை இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த பின்பு தான் கண்டுபிடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 319,200 கேலன் தண்ணீரை அவர் பயன்படுத்தியிருப்பதாக Dewa அனுப்பியுள்ள பில்லில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், வழக்கத்திற்கு மாறான நுகர்வு குறித்து தனக்கு எந்த எச்சரிக்கையும் அனுப்பப்படாதது ஏன் என்றும் அவர் ஆணையத்திடம் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த Dewa, ஸ்மார்ட் மீட்டர்கள் குறைந்தபட்சம் 48 மணிநேரம் தொடர்ச்சியான நுகர்வுகளை மட்டுமே கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த நுகர்வு அதிகரிப்பை அடையாளம் கண்டு உங்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

அதேசமயம், எந்தவொரு உட்புற நீர் கசிவுகளையும் சரிசெய்வது வாடிக்கையாளரின் பொறுப்பு என்றும், வழக்கத்திற்கு மாறான நுகர்வு பற்றிய எச்சரிக்கை என்பது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு கூடுதல் சேவை மற்றும் ஒவ்வொரு நீர் கசிவும் ஆணையத்தால் கண்டறியப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்றும் ஆணையம் அனுப்பிய மின்னஞ்சலில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

எனவே, இதுபோன்ற எதிர்பாராத சூழலில், அதிக பில் பெறுவதைத் தவிர்க்க, குடியிருப்பாளர்கள் தங்கள் நீர் இணைப்புகளை அவ்வப்போது கண்காணிக்குமாறும், குறிப்பாக கோடைகாலத்தில் நிலத்தடியில் கூட குழாய்கள் விரிவடையும் அல்லது வெடிக்கலாம் என்பதால், கசிவுகளைச் சரிபார்க்க ஒரு நிபுணரை நியமிக்குமாறும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

குறிப்பாக, நீர்க் கசிவைக் கண்டுபிடிக்க உங்கள் குடியிருப்பில் உள்ள வாஷிங் மெஷின் மற்றும் டிஷ் வாஷர் போன்ற தண்ணீரை பயன்படுத்தும் சாதனங்கள் மற்றும் அனைத்து குழாய்களையும் சில மணி நேரங்கள் அணைத்து விட்டு, உங்கள் ஸ்மார்ட் மீட்டரை சரிபாருங்கள் என்றும், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீட்டரின் அளவு உயர்ந்தால் நீர்க் கசிவு இருப்பதை தெரிந்து கொள்ளலாம் என்றும் Dewa அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!