வளைகுடா செய்திகள்

வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் விசாவில் புது மாற்றத்தினை அறிவித்த சவுதி அரேபியா… விசா முடிவடையும் கடைசி தேதி வரை நாட்டிற்குள் வரலாம் என அறிவிப்பு..!!

சவுதி அரேபியா நாடானது வெளிநாட்டினருக்கான விசா விதிகளை தளர்த்தி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டிலிருந்து எக்ஸிட்/ரீஎன்ட்ரி  விசாவில் வெளியேறும் வெளிநாட்டினர், விசா செல்லுபடியாகும் கடைசி நாள் வரை சவுதி அரேபியாவிற்குள் திரும்பலாம் என்று அறிவித்துள்ளது.

இதன் மூலம், சவூதி அரேபியாவிற்கு வெளியே இருக்கும் போது, ​​எக்ஸிட்/ரீ என்ட்ரி விசா வைத்திருப்பவர்கள், அப்ஷர் பிளாட்பார்ம் அல்லது முகீம் போர்ட்டல் வழியாக விசா நீட்டிப்பு தொடர்புடைய கட்டணங்களைச் செலுத்திய பிறகு, தங்கள் விசாக்களை மின்னணு முறையில் நீட்டிக்க முடியும் என்றும் நாட்டின் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் எக்ஸிட்/ரீ என்ட்ரி விசா வழங்குவதற்கு வெளிநாட்டவரின் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 90 நாட்கள் வேலிடிட்டி பெற்றிருக்க வேண்டும் எனவும், ஃபைனல் எக்ஸிட் விசா வழங்குவதற்கு குறைந்தபட்சம் 60 நாட்கள் வேலிடிட்டி பெற்றிருக்க வேண்டும் எனவும், அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்பொழுது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பானது வெளிநாட்டவர்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் இயக்குநரகத்தின் கூற்றுப்படி, பயனாளி நாட்டிற்கு வெளியே இருந்தால், எக்ஸிட்/ரீஎன்ட்ரி விசாவை ஃபைனல் எக்ஸிட் விசாவாக மாற்றுவது அனுமதிக்கப்படாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வந்து பணிபுரியும் நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. சவுதி அரேபியாவானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பெரிய சமூகமாக விளங்குகின்றது.

கடந்த மே மாதம் வெளியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில், நாட்டின் மக்கள் தொகையான 32.2 மில்லியனில் வெளிநாட்டினர் 13.4 மில்லியன் அதாவது 41.5 சதவீதம் உள்ளனர் என கூறப்பட்டுள்ளத. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சவுதி அரேபியாவில் உள்ள மொத்த வெளிநாட்டவர்களில் 42 சதவீதத்துக்கும் மேல் மூன்று நாடுகளைச் சேர்ந்த ஆசிய நாட்டவர்கள் உள்ளனர்.

சவுதி அரேபியாவில் உள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களில் 2.1 மில்லியன் மக்கள் தொகையுடன் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தை வகிக்கின்றனர். அதைத்தொடர்ந்து இந்தியர்கள் 1.88 மில்லியன் மற்றும் பாகிஸ்தானியர்கள் 1.81 மில்லியனுடன் முன்னணியில் உள்ளனர் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Related Articles

Back to top button
error: Content is protected !!