வளைகுடா செய்திகள்

மாணவர்கள் 20 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வரவில்லை என்றால் பெற்றோருக்கு சிறைதண்டனை… புதிய அறிவிப்பை வெளியிட்ட சவுதி!

சவுதி அரேபியாவில் ஒரு சில நாட்களுக்கு முன் பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு பள்ளிகள் சம்பந்தமான முக்கியமான அறிவிப்புகளை அரசு வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் 20 நாட்களுக்கு மேல் பள்ளிகளுக்கு வராமல் இருந்து, அது குறித்து பள்ளிகளுக்கு முறையான தகவல் அளிக்கப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளிவந்த தகவல்களின்படி, மாணவர்கள் 20 நாட்களுக்கு மேல் எந்த காரணமும் இல்லாமல் பள்ளிகளுக்கு விடுப்பு எடுக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரை அரசு குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது வழக்கு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விசாரணையை முடித்த பிறகு, வழக்கறிஞர்கள் வழக்கை சட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பும் பட்சத்தில் அங்கு மாணவர் இல்லாதது குறித்து பாதுகாவலர் அலட்சியமாக இருப்பது கண்டறியப்பட்டால், பெற்றோருக்கு எதிராக பொருத்தமான சிறைத்தண்டனையை வழங்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை புதிய கல்வியாண்டில் சிறந்த படிப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அறிக்கை கூறுகிறது. இதன்படி, இவ்வாறு விடுமுறை எடுத்தால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் குறித்த தகவல்களை பள்ளியின் முதல்வர் சம்பந்தப்பட்ட கல்வித்துறை இடம் புகார் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், விடுப்பு எடுத்த மாணவரின் பாதுகாவலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை அரசு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கு வராத காரணத்தைக் கண்டறிய குடும்பப் பாதுகாப்புத் துறை மாணவரின் சாட்சியத்தைக் கேட்கும். அதன் பிறகே தண்டனை உறுதி செய்யப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத கோடை விடுமுறைக்குப் பிறகு சவுதி அரேபியா முழுவதும் வெவ்வேறு கல்வி நிலையங்களில் உள்ள 6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இந்த வார தொடக்கத்தில் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!