அமீரக செய்திகள்

வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான்-3: இந்தியாவின் சாதனையை பாராட்டி தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவிக்கும் அமீரக தலைவர்கள்…!!

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிரக்கியதற்காக உலகெங்கிலும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் இந்தியாவில் தொடர்ந்து நல்லுறவைப் போற்றி வரும் அமீரகத்தின் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரக அதிபரான மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் இந்த வெற்றிகரமான சாதனையை படைத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், சந்திரயான்-3 பாதுகாப்பாக  தரையிறங்கியது “கூட்டு அறிவியல் முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க செயல்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஷேக் முகமது சமூக ஊடக தளமான Xஇல் இந்தியாவின் சாதனையை பாராட்டி அரபு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “மனிதகுலத்தின் இந்த வரலாற்று சாதனைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, அமீரக துணைத் தலைவரும் “இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், விண்கலத்தை மென்மையாக தரையிறக்கிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதுபோல, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், “விடாமுயற்சியின் மூலம் தேசங்கள் கட்டமைக்கப்படுகின்றன, இந்தியா தொடர்ந்து வரலாற்றை உருவாக்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், அமீரகத்தின் விண்வெளி நிறுவனமான முகமது பின் ரஷித் விண்வெளி மையத்தின் (MBRSC) இயக்குநர் ஜெனரல் சலீம் அல் மர்ரி அவர்கள், இஸ்ரோவின் சாதனையைப் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது; “உலகளாவிய அறிவியல் சமூகத்திற்கு மதிப்புமிக்க தகவல்களை வழங்கும் சந்திரன் ஆய்வு பயணத்தில் ஒரு புதிய சாதனை” என்றார்.

இவ்வாறு வரலாற்றை உருவாக்கியதற்காக இஸ்ரோவை வாழ்த்திய அமீரக விண்வெளி ஏஜென்சி, பிரக்யான் என்ற ரோவர் நிலவில் இந்தியக் கொடியை ஏந்தியிருக்கும் ரெண்டரிங் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.

சந்திரயான் -3 விண்கலத்தின் மூலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்றை இந்தியா படைத்துள்ளது. அதேவேளை, நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய நாடுகள் வெற்றிகரமாக நிலவை சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!