வளைகுடா செய்திகள்

குவைத்தில் வெளிநாட்டவர்கள் செலுத்த வேண்டிய அபராதம் மட்டும் அரை பில்லியன் தினார்கள்.. பணத்தை வசூலிக்க அரசு தீவிர நடவடிக்கை..!!

குவைத் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், குவைத்தை விட்டு தங்கள் தாயகத்திற்கு திரும்பும் முன்னர் அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை செலுத்திய பின்பே செல்ல முடியும் என அரசு புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் கடன் வசூலிக்கும் திட்டமானது செப்டம்பர் 6ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் குவைத்தில் வெளிநாட்டவர்கள் செலுத்த வேண்டிய மொத்த கடன்கள், அபராதங்கள் மற்றும் சேவைக் கட்டணம் ஆகிய எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளும் பொழுது சுமார் அரை பில்லியன் தினார் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குவைத்தின் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல்-கலீத்தின் வழிகாட்டுதல்களின் கீழ், குவைத் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பணத்தினை வசூலிப்பதற்காக இந்த புதிய திட்டமானது வகுக்கப்பட்டது. இதன் மூலம் வெளிநாட்டினர் தங்களின் அபராத தொகையை செலுத்த வேண்டிய சட்டத்தை கடுமையாக்க திட்டமிடப்பட்டது. இதன்படி எல்லா அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து, அனைத்து அபராதத்தொகைகளையும் வசூலிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது.

தற்போது போக்குவரத்து துறை, மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம், தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் நீதி அமைச்சகம் உள்ளிட்ட நான்கு அரசு நிறுவனங்கள், வெளிநாட்டினரிடம் பயணம் செய்வதற்கு முன் உரிய தொகையை வசூலிக்க ஒன்றாக இணைந்துள்ளன. இனி படிப்படியாக சுகாதார அமைச்சகம், குவைத் நகராட்சி, வர்த்தக அமைச்சகம், சுற்றுச்சூழல் பொது ஆணையம் போன்ற பிற நிறுவனங்களும் இந்த பட்டியலின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பல வெளிநாட்டவர்கள் பல்வேறு அமைச்சகங்களுக்கு செலுத்த வேண்டிய உரிய தொகையை செலுத்தாமல் நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறியதால், ஆண்டு முழுவதும், அரசிற்கு 3 பில்லியன் தினார்கள் நஷ்டமாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவேதான், நிலுவையில் உள்ள அனைத்து தொகைகளையும் செலுத்தாமல் வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற இந்த புதிய விதிமுறை கடுமையாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!