வளைகுடா செய்திகள்

சட்டத்தை மீறி தங்குபவர்களுக்கு இனி இடமில்லை..!! விதிமீறுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள குவைத்..!!

விதி மீறல்களை மீறி குவைத் நாட்டில் தங்கி இருப்பவர்கள் கண்டறியப்பட்டு தொடர்ச்சியாக நாடு கடத்தப்பட்டு வரும் நிலையில், இனி வரும் காலங்களிலும் விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும் என அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது குறித்து அமைச்சகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குடியிருப்பு சட்டத்தை மீறுபவர்கள் கண்டிப்பாக கண்டறியப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் எனவும், குவைத் மண்ணில் இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர்களை அரசு மன்னிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்தை மீறி தங்கி இருப்பவர்களை கண்டறிய குடியிருப்பு பகுதிகள், பண்ணைகள் மற்றும் பாலைவனப் பகுதிகள் ஆகியவற்றில் தொடர் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், இதற்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் குவைத் நாட்டில் குடியுரிமையை மீறுபவர்கள் இருக்க மாட்டார்கள் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல்-கலீத் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாதவர்களை கண்டறிய 24 மணி நேரமும் அரசு கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், அரசின் அனுமதி இல்லாமல் தங்கி பணிபுரியும் தொழிலாளர்களை கண்டறிவதன் மூலம், நாட்டின் தொழிலாளர் சந்தை தூய்மைப்படுத்தப்படும் எனவும், முறைகேடு கண்டறியப்பட்டால் எவ்விதமான சலுகையும் வழங்கப்படாமல் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு குழுவானது சந்தைகள் மற்றும் கடைகளில் வசிப்பவர்களின் ஆவணங்களை சரி பார்ப்பதில் தொடங்கி, நாடு முழுவதிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் போலி ஆவணங்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பான முறையில் தங்கி இருப்பவர்கள் அவர்களாகவே வந்து அரசிடம் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் நாடு கடத்தும் விதிமுறைகளை அரசு எளிதாக்கி, நடைமுறைகள் முடிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. எனவே, 24 மணி நேரமும் பாதுகாப்பு குழு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் யாரும் அரசின் பார்வையிலிருந்து தப்ப முடியாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!