அமீரக செய்திகள்

துபாய்: 2 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான 29 புதிய திட்டங்கள்..!! 12 கி.மீ தூரத்திற்கு புதிய கடற்கரை..!! ஒப்புதல் அளித்த துபாய் மன்னர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவரும் துபாயில் தற்போது 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் துபாயின் கடற்கரை பகுகுதிகளை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

துபாயில் ஏற்கனவே இருக்கக்கூடிய மம்ஸார் கடற்கரையிலிருந்து மற்றுமொரு கடற்கரை பகுதியான உம் சுகைம் II வரையிலுமான பகுதிகளில் சுமார் 12 கி.மீ தூரத்திற்கு இந்த திட்டத்தின் மூலம் புதியதாக கடற்கரைகள் சேர்க்கப்படும் என்றும், மேலும் இது 1 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்படும் என்றும் இன்று சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேக் முகமது அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ட்விட்டர் பதிவில், 2 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான 29 புதிய திட்டங்களுக்கும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஒப்புதல் அளிப்பதாக அறிவித்துள்ளார். இதில் 8 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமையான இடங்களையும், கார்டன்களையும் துபாயில் உருவாக்கும் திட்டமும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய திட்டங்கள் குறித்து ஷேக் முகமது அவர்கள் வெளியிட்டிருந்த செய்தியில், “நாங்கள் எங்கள் எதிர்காலத்தையும், எதிர்கால வாழ்க்கையையும் கட்டமைக்கும் விதமாக, எங்கள் நகரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் நாங்கள் தொடர்ந்து முன்னேற்றி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் துபாயில் 4 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ள, கழிவுகளை சுத்திகரிப்பதன் மூலம் எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டம் (energy production by treating waste) குறித்தும் அவர் வெளியிட்டிருந்த மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார். அதில் “இன்று 4 பில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கழிவுகளை சுத்திகரிப்பதன் மூலம் எரிசக்தி உற்பத்தி செய்யும் துபாய் திட்டம் குறித்து எங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு ஆயிரம் குப்பை லாரிகளில் கொண்டுவரப்படும் கழிவுகளை கொண்டு 1,35,000 வீடுகளுக்கு போதுமான ஆற்றலை (energy ) உருவாக்கும் திறன் கொண்டது. துபாய் ஒரு சுத்தமான நகரம். அதன் ஆற்றல் (energy ) சுத்தமாக இருக்கிறது. மேலும் அதன் சுற்றுப்புறங்களும் சுத்தமாக இருக்கின்றன. மேலும் அதன் ஆற்றல் வளங்களும் (energy resources) சுத்தமாக இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!