அமீரக செய்திகள்

UAE: சாலையில் திடீரென தீப்பிடித்த கார்.. உள்ளே சிக்கிய 5 பேர்.. காப்பாற்றிய எமிராட்டி சகோதரிகள்.. துணிச்சலான செயலை கௌரவித்த RAK போலீஸ்..!!

ராஸ் அல் கைமா எமிரேட்டில் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த காரில் சிக்கியிருந்த 5 ஆசிய நாட்டைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களை எமிராட்டி சகோதரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் இந்த எமிராட்டி சகோதரிகளின் துணிகரச் செயலலைப் பாராட்டி ராஸ் அல் கைமா காவல்துறையினர் கவுரவித்துள்ளனர்.

அமீரகத்தின் அரபு நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திகளின் படி, அம்னா மற்றும் மைதா முஃப்தா முஹம்மது என்ற இரண்டு எமிராட்டி சகோதரிகளும் எரிந்து கொண்டிருந்த காரின் தீயில் இருந்து காயமடைந்த நபர்களை தைரியமாக வெளியே இழுத்துக் காப்பாற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினர் வரும் வரை இருவரும் அவர்களுக்குத் தேவையான முதலுதவிகளையும் வழங்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மைதா என்ற பெண் விவரிக்கையில், இருவரும் ராஸ் அல் கைமா விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதைப் பார்த்ததாகவும், காரின் டயர் வெடித்த விபத்தில் ஆசிய குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அதில் காயமடைந்திருந்ததைக் கண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அந்த விபத்தில் சிக்கிய 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கிழிந்த உடைகள் மற்றும் பல காயங்களுடன் தரையில் விழுந்து கிடந்ததாகவும், அதைக் கண்ட மைதா உடனடியாக அந்த பெண்ணின் தலையையும் கழுத்தையும் தொழுகை விரிப்பால் இறுக்கி பிடித்ததாகவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் நலமாக இருப்பதாக அப்பெண்ணிற்கு உறுதியளித்து தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அவரது சகோதரி அம்னாவும் ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வரும் வரை காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து முதலுதவிகளை வழங்கிதாகவும் மைதா மேலும் கூறியுள்ளார். எமிராட்டி சகோதரிகளின் இந்த செயலை அறிந்த பலரும் இருவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், எமிராட்டி சகோதரிகளின் இத்தகைய முயற்சிகள் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் மனித ஒற்றுமையின் கொள்கைகளை மேம்படுத்துவதாகக் கூறிய கர்னல் அல்-நக்பி, அம்னா மற்றும் மைதா முஃப்தா முஹம்மதுவின் நேர்மறையான குடியுரிமை மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வை மிகவும் மதிப்பதாகக் கூறி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, இரண்டு சகோதரிகளும் RAK காவல்துறைக்கு தங்கள் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!