அமீரக செய்திகள்

அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று பெய்த கனமழை.. மேலும் இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த தேசிய வானிலை மையம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) இன்று அமீரகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கனமழையுடன் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் பார்க்கும் தொலைவின் தூரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

தேசிய வானிலை மையம் (NCM) இன்று திங்களன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பலத்த காற்றின் காரணமாக தளர்வான பொருள்கள் மற்றும் மரக்கட்டை உள்ளிட்ட பலவீனமான கட்டமைப்புகள் “ஆபத்தானதாக மாறக்கூடும்” என்று எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புஜைராவின் வாடி அல் ஃபே, குப் மற்றும் மசாஃபி-டிப்பா சாலையில் இன்று கனமழை பெய்ததாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஷார்ஜாவின் கோர் ஃபக்கானிலும் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதாகவும் NCM அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது.

அடுத்ததாக டிப்பா, அல் ஃபுஜைரா மற்றும் வேறு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்திருப்பதாகவும் தேசிய வானிலை மையம் கூறியுள்ளது. தேசிய வானிலை மையத்தின் வரக்கூடிய ஐந்து நாள் வானிலை அறிக்கையின்படி, நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளிலும் அமீரகத்தின் சில பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் சில நாட்களில் குளிர்காலம் தொடங்கவிருப்பதால் அமீரகத்தின் வெப்பநிலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று திங்கட்கிழமை அமீரகத்திலேயே மிகக் குறைந்த வெப்பநிலையாக ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸில் 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதாகவும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!