அமீரக செய்திகள்

அமீரகத்தில் அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்..? புதிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்த அமைச்சகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான புதிய கொள்கைக்கு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் (MoE) ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கொள்கையின் கீழ் அமீரகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பொருட்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு அதனடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் வகை பொருட்கள்..

அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான ஃபிரெஷ் மற்றும் உலர்ந்த பால், சர்க்கரை, உப்பு, அரிசி, முட்டை, ரொட்டி, மாவு, காய்கறிகள் மற்றும் பழங்கள், மீன் மற்றும் கடல் உணவு, இறைச்சி மற்றும் ஃபிரெஷ் சிக்கன், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், மினரல் வாட்டர் உள்ளிட்ட மிகவும் விரும்பப்படும் 11,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் முதல் வகை பொருட்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

முதல் வகையை சார்ந்த பொருட்களுக்கான அதிக இறக்குமதிச் செலவுகளின் விளைவாக, சப்ளையர்கள் அதன் விலையை உயர்த்த விரும்பினால், முதலாவதாக அவர்கள் அரசின் முன் அனுமதியை பெற வேண்டும். அதற்கு பொருளாதார அமைச்சகத்தின் இணையதளத்தில், இந்தச் சேவைக்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட அமைப்பின் மூலம் விலை ஏற்றத்திற்கான முன் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பொருட்களின் விலை உயர்வை நியாயப்படுத்த விண்ணப்பதாரர்கள் செலவு அதிகரிப்பு மற்றும் அவற்றின் நேரடி காரணங்கள் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் தரவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் அமைச்சகம் அவர்களின் கோரிக்கையையும், நியாயங்களையும் முழுமையாக ஆய்வு செய்து ஒப்புதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விலை உயர்வின் சதவீதத்தை முடிவு செய்யலாம். .

இரண்டாவது வகை பொருட்கள்..

இரண்டாவது வகையின் கீழ் பிரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விலை நிர்ணயத்திற்கு, முன் அனுமதியின் தேவையிலிருந்து சப்ளையர்களுக்கு பொருளாதார அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது. இத்தகைய பொருட்கள் அதிக விலை போட்டித்தன்மை மற்றும் அதிக எண்ணிக்கையிலான சப்ளையர்களின் அடிப்படையில் வழங்கல் மற்றும் தேவை மாறுபாடுகளுக்கு ஏற்ப நாட்டின் பல்வேறு சந்தைகளில் பல மாறுபட்ட விலையில் பொருட்கள் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.

அமீரக சந்தை வழிமுறைகளுக்கு ஏற்ப அவற்றின் விலைகளின் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் விதத்தில் இரண்டாவது வகையின் கீழ் பல்வேறு பொருட்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் பிஸ்கட், சாக்லேட்டுகள், அனைத்து வகையான தின்பண்டங்கள், சில சீஸ் பொருட்கள், உறைந்த உணவுப் பொருட்கள், பழச்சாறுகள் மற்றும் ஐஸ்கிரீம், தேநீர், காபி, கோகோ மற்றும் அதன் தயாரிப்புகள், கோதுமை, ஓட்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் அனைத்து வகையான வீட்டு சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் கருவிகள் போன்றவை அடங்கும்.

40 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களின் விலைகளைக் கண்காணித்தல்..

நாட்டில் உள்ள 40க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில், மிகவும் விரும்பப்படும் 300 வகையான அடிப்படைப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க, விலைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் விலைக் கட்டுப்பாடு என்பது ஒரு தொடர்ச்சியான செயல் என்றும், நியாயமற்ற விலை உயர்வு என்பது அதன் உரிமையாளரை சட்டரீதியான விளைவுகளுக்கு உட்படுத்தும் ஒரு விதிமீறல் என்றும் எச்சரித்துள்ளது.

அன்றாடம் தேவைப்படும் முக்கியமான பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள், இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் உள்ள விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமீரகத்தில் இந்த பொருட்களின் மூலோபாய இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் உள்ளூர் மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் பொருளாதாரத் துறைகள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் இணைந்து, விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொருளாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!