துபாயில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் கயாக்கிங் செய்து மகிழ்ந்த குடியிருப்பாளர்கள்!! சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ…

துபாயில் நேற்று பெய்த கனமழையால் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இவ்வாறு சாலையில் தேங்கியுள்ள மழைநீருக்கு மத்தியில் குடியிருப்பாளர்கள் சிலர் கயாக்ஸ் (kayaks) மற்றும் பேடில் (paddle) பலகைகளைப் பயன்படுத்தி துடுப்புப் போட்டுக்கொண்டே சாலைகளைச் சுற்றி வரும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெள்ளம் சூழ்ந்த சாலைகள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் என்றாலும், சில குடியிருப்பாளர்கள் தங்களிடம் உள்ள கயாக்கைப் பயன்படுத்தி தேங்கிய நீரில் உற்சாகமாக சவாரி செய்து மகிழும் வீடியோ காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், அரேபியன் ராஞ்ச்ஸ் 2 இல் ஒரு குடியிருப்பாளர் கயாக்கிங் செய்வதைக் காணலாம். இது குறித்து அவர் கூறுகையில், மழை வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் கார்கள் மூழ்கி, இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், அதில் கயாக்கிங் செய்தது வேடிக்கையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், இரண்டு பேர் வெள்ளம் சூழ்ந்த சாலையில் சர்ஃபிங் செய்யும் வீடியோ காட்சியும் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில் அழகிய புர்ஜ் அல் அராப் தெரிவது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
மற்றொரு வீடியோவில், துபாயில் வசிக்கும் முஸ்தபா ரஃபிக் டாஃபர் என்பவர், தெருவில் தேங்கியுள்ள மழைநீரில் உற்சாகமாக கயாக்கிங் செய்த போது, நல்ல அனுபவம் பெற்றதாகக் கூறியுள்ளார்.
இவ்வாறு குடியிருப்பாளர்கள் நகரின் தெருக்கள் மற்றும் சாலைகளில் வேடிக்கையாக செய்த செயல்கள் சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே 4 நாட்களுக்கு மழை இருக்கும் என வானலை மையம் எச்சரித்திருந்த நிலையில் நேற்று அமீரகம் முழுவதும் கனமழை மற்றும் இலேசான மழை பெய்திருக்கின்றது. இந்த மழையானது இன்றும் தொடரும் என வானிலை மையம் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel