மஹ்சூஸ் டிராவில் 20 மில்லியன் திர்ஹம் பரிசை வென்ற இந்தியர்..!! வங்கியில் கடன் வாங்க திட்டமிட்டவருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகைக்கான மிகப்பெரிய டிராவை வாரந்தோறும் நடத்திவரும் மஹ்சூஸ் டிராவில், கடந்த வாரம் இந்திய நாட்டவர் ஒருவர் வென்று அசத்தியுள்ளார். அமீரகத்தில் டெக்னீசியனாகப் பணிபுரிந்துவரும் ஸ்ரீஜு (Shreeju) என்ற இந்தியரே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மஹ்சூஸ் டிராவில் 20 மில்லியன் திர்ஹம் ரொக்கப் பரிசை வென்று அதிர்ஷ்டசாலி ஆகியுள்ளார்.
அமீரகத்தில் உள்ள ஃபுஜைரா எமிரேட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ஒன்றில் கட்டுப்பாட்டு அறை டெக்னீசியனாக பணிபுரியும் ஸ்ரீஜூ, டிராவில் வென்ற 20 மில்லியன் திர்ஹம் பரிசுக்கான காசோலையை பெற்றுக் கொண்ட போதிலும், வெற்றி பெற்ற தருணத்தை நம்பமுடியாமல் திகைப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், டிராவில் இவ்வளவு பெரிய தொகையை வென்றிருந்தாலும், தனது வேலையை விட்டு விலகப்போவதில்லை என்றும், வேலையைத் தொடரப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். சுமார் 11 வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் ஸ்ரீஜுவிற்கு ஆறு வயதில் இரட்டைக் குழந்தைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த ஶ்ரீஜூ, வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு கனவை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். ஆனால் இப்போது பெற்றி வெற்றியின் மூலம் கடன் வாங்க வேண்டிய தேவை இல்லாமல் போனதுடன், இந்த பரிசுத் தொகையை வைத்து ஒரு பெரிய பங்களாவையே கட்ட முடியும் என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக Mahzooz டிராவில் பங்கேற்று வரும் ஸ்ரீஜு, எப்போதும் சீரற்ற முறையில் எண்களைத் தேர்ந்தெடுத்து வந்ததாகவும், இந்த முறை முந்தைய டிராவைப் போல நான்கு எண்களைத் தேர்ந்தெடுத்து, இரண்டு எண்களை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவரது வெற்றி குறித்து அவருக்கு வந்திருந்த மின்னஞ்சல் மூலமாக அறிந்ததாகவும், இதற்கு முன்பு ஒரு இலக்கத்தையும், மூன்று இலக்கங்களையும் பொருத்தியது போல இம்முறையும் அப்படித்தான் இருக்கும் என்று எண்ணியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவருக்கு வந்திருந்த மின்னஞ்சலைச் சரிபார்த்த பிறகு, முதல் பரிசான 20 மில்லியன் திர்ஹமை தான் வென்றிருப்பதைக் கண்டு திகைத்துப் போனதாகவும், அவரைப் போலவே அவரது மனைவியும் இந்த எதிர்பாராத வெற்றி குறித்து நம்பமுடியாமல் வியப்படைந்ததாகவும் ஸ்ரீஜு கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel