அமீரக செய்திகள்

அமீரகத்தில் 130,000 மரங்களுடன் திறக்கப்பட்டுள்ள பசுமையான மரப்பண்ணை.. பார்வையாளர்களுக்கு இலவச நுழைவு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில், 130,000 மரங்களைக் கொண்ட புதிய பசுமையான ஷாஜர் மரப்பண்ணை ஒன்று அமைந்துள்ளது. மேலும் இங்கு 50 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான மரங்கள் உள்ளூர் காலநிலைக்கு ஏற்றவாறு கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அமீரகத்திலேயே மிகப்பெரியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மரப்பண்ணை, ஷார்ஜாவில் உள்ள டெவலப்பர் அரடாவிற்கு சொந்தமான அல்ஜடா கம்யூனிட்டியில் திறக்கப்பட்டுள்ளது. டெவலப்பர் அரடாவின் இந்த பசுமையான ஈர்ப்பை பார்வையாளர்கள் பார்வையிடுவதுடன், மரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகிறது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம் என அதன் நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும், பார்வையாளர்கள் இந்த பசுமையான தாவரங்களுக்கு இடையே உலா வரும் வாய்ப்பை இலவசமாகப் பெறலாம் என்றும், இந்த பசுமையான இலக்கை பார்வையிட விரும்புவோர் இலவச நுழைவுக்காக அதன் பிரத்யேக இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் எனவும் அதன் நிர்வாகத்தினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷார்ஜாவில் உள்ள அல் ஜடா பார்க்கிற்கு அருகே அமைந்துள்ள, அமீரகத்தின் இந்த மிகப்பெரிய ஷாஜர் மரப்பண்ணையை சுற்றிப்பார்க்க விரும்புவோருக்கு அங்கு என்னவெல்லாம் உள்ளது என்பதற்கான முன்னோட்டத்தை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வெல்கம் சென்டர்:

உயர்ந்த மரங்களுக்கு நடுவே நீங்கள் செல்வதற்கு முன் வரவேற்பு மையம் உங்களுக்கு மரங்களின் நன்மைகள், காடுகளை அழிப்பதன் விளைவுகள் மற்றும் பல்லுயிர் பிரச்சினைகள் பற்றி விவரிக்கும். அதே நேரத்தில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கிரீன் ஹவுஸ்:

வெல்கம் சென்டரை அடுத்து பார்வையாளர்கள் முதலில் பார்க்கக்கூடியது கிரீன் ஹவுஸ். அங்கு ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. தாவர இனப்பெருக்கம் என்பது விதைகள், வெட்டல் மற்றும் பிற தாவர பாகங்கள் உட்பட பல்வேறு மூலங்களிலிருந்து புதிய தாவரங்களை வளர்க்கும் செயல்முறையாகும். குறிப்பாக, காட்டன்வுட் செம்பருத்தி, வேம்பு மற்றும் இந்திய கார்க் போன்ற தாவரங்கள் ஆறு மாதங்களுக்கு இங்கு வளர்க்கப்படுகின்றன.

சீடிங் ஏரியா:

மரக்கன்றுகள் போதுமான வலிமையானவுடன், அவை சீடிங் ஏரியாவிற்கு அனுப்பப்படுகின்றன. இங்கு மரக்கன்றுகள் செழிக்க போதுமான இயற்கை ஒளியைப் பெற நிழலிடப்பட்டிருக்கும். எனவே, அவை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கப்படும். மேலும், ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கும் ஒரு துணை மூங்கில் உள்ளது, அது ஆறு மாதங்களுக்கு வளரும் இடத்தில் நேராக வளர உதவுகிறது.

மரக்கன்று நடும் பகுதி:

இந்த பகுதியில் சராசரி வயது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த மரக்கன்றுகள், பெரிய மரங்களாக வளர அதிக பரப்பளவைக் கொண்ட பெரிய தொட்டிகளில் நடப்படுகின்றன.

ஓபன் ஸ்பேஸ்:

மரங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு வளர்ந்தவுடன், அவற்றை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு அரடா வசதிகளுக்கு கொண்டு செல்லப்படும் வரை, அவை தொடர்ந்து செழித்து வளரக்கூடிய திறந்தவெளிகளுக்கு மாற்றப்படுகின்றன.

ஒர்க் ஷாப்:

இந்த பசுமையான மரப்பண்ணையில் சுற்றிப்பார்ப்பது மட்டுமில்லாமல், பார்வையாளர்கள் தங்கள் சொந்த காஃப் மரங்களை (Ghaf trees) தொட்டிகளில் நடலாம்.

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!