UAE: நான்கு கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் வகையில் 60 நிமிடங்களுக்கு தொடர் வானவேடிக்கை நிகழ்ச்சி..!! அபுதாபியில் ஏற்பாடு..!!
துபாய், ராஸ் அல் கைமா எமிரேட்டுகளைப் போலவே, அபுதாபியிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சாதனை படைக்கும் 60 நிமிட வானவேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அபுதாபியின் அல் வத்பாவில் நடைபெற்று வரும் ஷேக் சயீத் ஃபெஸ்டிவலின் உயர் ஏற்பாட்டுக் குழு, புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் அதன் மெகா நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் பற்றிய விவரங்களை அறிவித்துள்ளது.
குறிப்பாக, 60 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் ஆடம்பரமான வானவேடிக்கை நிகழ்ச்சி இடம்பெற உள்ளது, இது அளவு, நேரம் மற்றும் வடிவமைப்பு நுணுக்கத்தின் அடிப்படையில் நான்கு கின்னஸ் உலக சாதனைகளை முறியடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் 5,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் அடங்கிய விரிவான ட்ரோன் காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அவை அல் வத்பா வானத்தில் சிக்கலான வடிவங்களில் வட்டமிடும், இது பிராந்தியத்தில் ஒரு புதிய சாதனையாகும்.
அதுமட்டுமில்லாமல், ஒரு பெரிய லேசர் ஷோ, எமிரேட்ஸ் ஃபவுன்டைன், ஒளிரும் டவர்ஸ் கார்டன் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல கலாச்சார நிகழ்ச்சிகளுடன் பல்வேறு பெவிலியன்கள் போன்றவையும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
வானவேடிக்கை:
ஷேக் சையத் ஃபெஸ்டிவலில் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், புதிய நிகழ்ச்சிகளுடன் 60 நிமிடங்கள் நீடிக்கும் வானவேடிக்கை நிகழ்ச்சி மூலம், அளவு, நேரம் மற்றும் வடிவமைப்பின் அடிப்படையில் 3 புதிய கின்னஸ் உலக சாதனைகளை முறியடிக்க உள்ளது.
ட்ரோன் காட்சிகள்
அபுதாபியின் அல் வத்பாவில் வானத்தில் வட்டமிடும் 5,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் அற்புதமான காட்சிகளை நிகழ்த்தி மற்றொரு கின்னஸ் உலக சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.
லேசர் ஷோ
எமிரேட்ஸ் ஃபவுண்டைனில் உள்ள சிறப்பு லேசர் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு மேலதிகமாக, இப்பகுதியில் முதல் முறையாக ஒரு பெரிய லேசர் நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் கண்டு மகிழலாம்.
கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்:
அல் வத்பாவிற்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் புத்தாண்டு தினத்தன்று வானத்தில் 100,000 வண்ணமயமான பலூன்களை வெளியிடுவதன் மூலம் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் சூழ்நிலையை அனுபவிக்கலாம். மேலும், DJ, நேரடி இசை நிகழ்ச்சி என பார்வையாளர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் புத்தாண்டில் மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கலாம்.
ஷேக் சயீத் ஃபெஸ்டிவலின் உயர் ஏற்பாட்டுக் குழு, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருவார்கள் என்பதால், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் மற்றும் கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, விழா சதுக்கத்திற்கு வெளியே மாபெரும் திரைகளை நிறுவியுள்ளது.
மற்ற கொண்டாட்டங்கள்:
விழாவில் பங்கேற்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் பார்வையாளர்களுக்கு தங்கள் அரங்குகளில் ஏராளமான பொழுதுபோக்கு கொண்டாட்ட நிகழ்வுகளை வழங்குகின்றன. ஃபன் ஃபேர் சிட்டி, ஹவுஸ் ஆஃப் ஹாரர், அல் ஃபோர்சன் இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் ரிசார்ட் நடவடிக்கைகள் என வேடிக்கையான விளையாட்டுகள் உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உணவுகள் மற்றும் ஷாப்பிங்
பார்வையாளர்கள் அங்குள்ள அனைத்து பெவிலியன்கள் மற்றும் பகுதிகளில் உள்ள பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் கடைகளில் இருந்து ஷாப்பிங் செய்யும்போது பெரும் தள்ளுபடிகள் மற்றும் ஆச்சரியங்களைப் பெறலாம். அதேசமயம், பலவிதமான சுவைகளை வழங்கும் பல உள்ளூர் மற்றும் சர்வதேச உணவகங்கள் மூலம் புதிய உணவு அனுபவங்களை அனுபவிக்கலாம்.
ஷேக் சையத் பெஸ்டிவலானது 9 மார்ச் 2024 வரை தினமும் பார்வையாளர்களை வரவேற்கிறது. வார நாட்களில் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் அதிகாலை 1 மணி வரையிலும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel