அமீரக செய்திகள்

துபாய் RTA வின் நான்கு விதமான நோல் கார்டுகளின் தனிச்சிறப்புகள் பற்றி தெரியுமா.?

துபாயில் வசிக்கும் நீங்கள் அடிக்கடிப் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவரா? துபாயின் RTA அனைவரின் தேவைகளுக்கும் ஏற்றவாறும், பலவிதமான வசதிகளுடன் நான்கு வகையான நோல் கார்டுகளை பயண்பாட்டில் வைத்துள்ளது. அதில் உங்களுக்கான சரியான நோல் கார்டைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

1. சில்வர் கார்டு (Silver Card):

துபாயில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நோல் கார்டு சில்வர் நோல் கார்டு ஆகும், இது ஏராளமான பயணிகளால் தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமான கார்டு எனக் குறிப்பிடப்படும் இந்த கார்டை RTA போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத சேவைகளிலும் பயன்படுத்தலாம்.

  • செலவு: நீங்கள் புதிதாக சில்வர் கார்டை வாங்க வேண்டும் எனில்,  25 திர்ஹம் முன்பணமாக செலுத்த வேண்டும். இதில் 19 திர்ஹம் கிரெடிட் அடங்கும்.
  • அதிகபட்ச இருப்பு: பதிவு செய்யாத பயனர்கள் தங்கள் கார்டுகளை 1,000 திர்ஹம் வரை ரீசார்ஜ் செய்யலாம், அதேசமயம் பதிவு செய்த பயனர்கள் (எமிரேட்ஸ் ஐடியுடன் இணைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட கார்டுகள்) 5,000 திர்ஹம் வரை ரீசார்ஜ் செய்யலாம்.
  • செல்லுபடியாகும் காலம்: 5 ஆண்டுகள்

2. கோல்ட் கார்டு (Gold Card):

கோல்ட் நோல் கார்டு வைத்திருக்கும் பயணிகள் மெட்ரோ மற்றும் டிராம் உள்ளே அவர்களுக்கான பிரத்யேக தனி அறைக்கு அணுகலைப் பெறலாம். சில்வர் நோல் கார்டுக்கு நிகரான அனைத்து RTA போக்குவரத்திற்கும் பயண்படுத்தப்படும் இந்த கார்டில், ஒரு பயணத்திற்கு வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு செலவாகும்.

  • செலவு: புதிய கோல்டு கார்டு வாங்குபவர்கள், 25 திர்ஹம் கட்டணமாக முன்கூட்டியே செலுத்த வேண்டும். இதில் 19 திர்ஹம் கிரெடிட் அடங்கும்.
  • அதிகபட்ச இருப்பு: பதிவு செய்யாத பயனர்கள் தங்கள் கார்டுகளை 1,000 திர்ஹம் வரையிலும், அதேசமயம் பதிவுசெய்த பயனர்கள் 5,000 திர்ஹம் வரையிலும் ரீசார்ஜ் செய்யலாம்.
  • செல்லுபடியாகும் காலம்: 5 ஆண்டுகள்

3. சிவப்பு டிக்கெட் (Red Ticket):

மெட்ரோவில் அடிக்கடி செல்லாத சுற்றுலாப் பயணிகள் அல்லது குடியிருப்பாளர்கள் தற்காலிக விருப்பத்திற்கு சிவப்பு டிக்கெட்டைப் பயன்படுத்தலாம். இது ஒரு நேரத்தில் ஒரு போக்குவரத்து முறைக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய காகிதத்தில் வழங்கப்படும் டிக்கெட் ஆகும். இதை வாங்கும் வாடிக்கையாளர்கள் மெட்ரோ, பஸ் மற்றும் டிராம் போன்ற RTA சேவைகளுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.

  • செலவு: ஒரு டிக்கெட் வாங்க 2 திர்ஹம் ஆகும்.
  • அதிகபட்ச இருப்பு: இது அதிகபட்சம் 10 பயணங்கள் அல்லது 5 தினசரி பாஸ்களுக்கு ரீசார்ஜ் செய்யக்கூடியது.
  • செல்லுபடியாகும் காலம்: டிக்கெட் 90 நாட்கள் அல்லது 10 பயணங்களுக்கு செல்லுபடியாகும்.

4. புளூ கார்டு (Blue Card):

தனிப்பட்ட நோல் கார்டு அல்லது நீல நிற கார்டானது சலுகைக் கட்டணங்களை வழங்குவதற்காக வழங்கப்படுகிறது. மேலும் இது குறிப்பிட்ட சில தகுதியுடையவர்களுக்கே பொருந்தும். மற்ற இரண்டு கார்டுகளைப் போலல்லாமல், தனிப்பட்ட கார்டு எமிரேட்ஸ் ஐடியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பயனர்கள் தங்கள் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் தங்கள் இருப்புத் தொகையை மீட்டெடுக்கும் வாய்ப்பையும் இந்த கார்டு வழங்குகிறது. கூடுதலாக, பயனர்கள் டாப்-அப் கிரெடிட்டிற்கான ஆன்லைன் சேவைகளையும் பெறலாம். இந்த கார்டு RTA வழங்கும் அனைத்து போக்குவரத்து முறைகளுக்கும் அணுகலை வழங்குகிறது.

  • செலவு: தனிப்பட்ட கார்டின் விலை 70 திர்ஹம்ஸ், அதில் 20 திர்ஹம்ஸ் கிரெடிட்டும் அடங்கும்.
  • அதிகபட்ச இருப்பு: இந்த கார்டுகளைப் பயன்படுத்தி பயனர்கள் Dh5,000 வரை பணம் வைத்துக்கொள்ளலாம்.
  • செல்லுபடியாகும் காலம்: 5 ஆண்டுகள்

தனிப்பட்ட நோல் கார்டைப் பெறக் கூடியவர்கள்:

  • மாணவர்கள் (வயது 5-23 வரை)
  • மாற்றுத் திறனாளிகள் – இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இருவருக்கும் பொருந்தும்.
  • சமூக விவகாரங்கள் தொடர்புடைய பயனாளிகள்.
  • மூத்த அமீரக நாட்டு குடிமக்கள் மற்றும் மூத்த வெளிநாட்டினர்கள் (60 வயதுக்கு மேல்)

நோல் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

1. மாணவர்கள்: பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுடைய செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியின் நகலை வெள்ளை பின்னணியுடன் உள்ள தனிப்பட்ட புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். கூடவே, அவர்கள் UAE பள்ளி அல்லது பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் என்பதை நிரூபிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணமும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. மாற்றுத் திறனாளிகள் (குடியிருப்பாளர்கள்): மாற்றுத் திறனாளிகள் வெள்ளை பின்னணியுடன் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் கார்டு அல்லது சனத் கார்டின் (Sanad Card) நகலையும் வழங்க வேண்டும்.

3. மாற்றுத் திறனாளிகள் (சுற்றுலா பயணி): தனிப்பட்ட அட்டையைப் பெற விரும்பும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பாஸ்போர்ட் அல்லது அடையாள அட்டையின் நகலை வெள்ளை பின்னணியுடன் தனிப்பட்ட புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் நாட்டில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம், அந்த நபர் மாற்றுத் திறனாளி அல்லது சிறப்பு உதவி தேவைப்படுபவர் என்று குறிப்பிடுவது ஆதாரமாகக் காட்டப்பட வேண்டும்.

4. மூத்த குடிமக்கள்: 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய தனிப்பட்ட புகைப்படத்துடன் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியின் நகலைக் காட்ட வேண்டும்.

5. சமூக விவகாரப் பயனாளிகள்: இந்தப் பிரிவின் கீழ் தகுதியுடையவர்கள் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியின் நகல், வெள்ளைப் பின்னணியுடன் கூடிய தனிப்பட்ட புகைப்படம் மற்றும் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ கடிதம் அல்லது ஆவணம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

6. மற்றவர்கள்: துபாயில் தனிப்பட்ட நோல் கார்டைப் பெற விரும்பும் மற்ற குடியிருப்பாளர்கள் தங்களுடைய செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியின் நகலையும் வெள்ளைப் பின்னணியுடன் கூடிய தனிப்பட்ட புகைப்படத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கூறியபடி தனிப்பட்ட நோல் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஆன்லைன் சேனல்கள் மூலம் தங்கள் அட்டையைப் பெற, சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 4 வேலை நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். அதேநேரம் ஜூம் (Zoom) ஸ்டோர்களில் உடனடி அனுகலைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!