அமீரக செய்திகள்

EXPO 2020 துபாய் கண்காட்சியின் ஒரு மாத கவுண்ட்டவுனைத் தொடங்கி வைத்த துபாய் ஆட்சியாளர்..!!

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் உலகின் மிகப் பிரம்மாண்ட நிகழ்வான எக்ஸ்போ 2020 துபாய் துவங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவர் எக்ஸ்போ தளத்தை பார்வையிட்டு முன்னோடியில்லாத இந்த நிகழ்விற்கு தனது உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் “ஆறு மாதங்கள் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வானது மனிதகுலத்திற்கு பல வருடங்களுக்கு பயனளிக்கும் யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக வரலாற்றில் இடம் பெறும்” என்று தனது டீவீட்டில் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 1 ஆம் தேதி புதன்கிழமை எக்ஸ்போ 2020 துபாய் தளத்திற்குச் சென்று இறுதி ஏற்பாடுகளை ஆய்வு செய்ததன் மூலம் அவர் நிகழ்வு தொடங்குவதற்கான ஒரு மாத கவுண்ட்டவுனைத் தொடங்கியுள்ளார். மேலும் 30 நாட்களில் துவங்கவிருக்கும்இந்த மெகா நிகழ்வு நடைபெறும் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் எக்ஸ்போவில் கலந்துகொள்ள கூடிய அணிகள் தயாராக உள்ளன மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடிந்துவிட்டன என்றும் ஷேக் முகமது அவர்கள் அறிவித்துள்ளார். அதனுடன் “ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துபாய் மற்ற 191 நாடுகளின் கவனத்தை ஈர்க்கும். உலகம் பார்த்திராத மிக அழகான மற்றும் மிகப்பெரிய இந்த நிகழ்வை வழங்குவதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை ஒரு மாத கவுன்டவுனைக் கொண்டாடும் விதமாக தனது ட்விட்டரில், “இன்றிலிருந்து (செப்டம்பர் 1) ஒரு மாதம், ஐக்கிய அரபு அமீரகம் பெருமையாக எக்ஸ்போ 2020 துபாயை நடத்துகிறது, இது உலகின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும். எனது சகோதரர் முகமது பின் ரஷீத்தின் வழிகாட்டுதலின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிகழ்வு, கலாச்சார உரையாடல் மற்றும் பரிமாற்றத்திற்கு உதவுபவராக நம் நாட்டின் நீண்டகால வரலாற்றை உருவாக்குகிறது, ”என்று ட்வீட் செய்துள்ளார்.

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி ஆறு மாதம் நடக்கவிருக்கும் இந்த உலகளாவிய கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து 25 மில்லியன் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் இந்த முதல் எக்ஸ்போ, பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான நிகழ்வாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக எக்ஸ்போ 2020 அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்காட்சியில் பார்வையாளர்களை கவரும் விதமாக தினமும் 60 நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. மேலும் எக்ஸ்போ 2020 துபாய் தளத்தில் 200 க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் நிகழ்வில் கலந்துகொள்ளும் 191 நாடுகளின் அரங்குகள் என மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் எக்ஸ்போ 2020 அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வை குறித்து எக்ஸ்போ 2020 பதிவிட்டிருக்கும் டீவீட்டில், “எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, எங்களால் முடியும் என்று நாங்கள் நம்பினோம் – இன்று நாம் இங்கே இருக்கிறோம்! அடுத்த 30 நாட்களில், ஒரு புதிய பயணம் தொடங்கும் போது, ​​உலகை வரவேற்க எங்கள் கதவுகளைத் திறப்போம்” என்று கூறியுள்ளது.

எக்ஸ்போ 2020 எனும் இந்த மெகா நிகழ்வை எந்த நாடு நடத்தும் என்று எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளிடையே நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வென்றதை தொடர்ந்து நவம்பர் 27, 2013 அன்று அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!