அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் பணிபுரிபவர் ஒரு வருடத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக வருடாந்திர விடுப்பு எடுக்க முடியுமா..?? தொழிலாளர் சட்டம் கூறுவது என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறை நிறுவனத்தில் வேலை செய்பவரா? வேலையில் சேர்ந்து ஒரு வருடம் முடிவதற்கு முன்னதாகவே, வருடாந்திர விடுப்பு (Annual Leave) எடுக்க வேண்டிய தேவை உள்ளதா? இது போன்று வேலையில் சேர்ந்து ஒரு வருடம் முடிவதற்கு முன்னதாகவே வருடாந்திர விடுப்பு எடுப்பது தொடர்பான ஒரு தொழிலாளியின் உரிமைகள் என்ன என்பது பற்றி அமீரக தொழிலாளர் சட்டம் (UAE Labour Law) கூறுவதை இங்கு பார்க்கலாம்.

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் தொழிலாளர்களுக்கு அவர்களின் வருடாந்திர விடுப்பு உரிமை பற்றி பகிர்ந்துள்ளது. அந்த பதிவின் படி, ஒரு ஊழியர் நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வருடம் பூர்த்தி செய்யாத நிலையிலும் வருடாந்திர விடுப்பு எடுத்துக் கொள்ள அமீரக தொழிலாளர் சட்டம் அனுமதிக்கிறது.

அதாவது, வேலையில் சேர்ந்த ஊழியர் தனது தகுதிகாண் எனப்படும் புரோபேஷன் காலமான ஆறு மாத சேவை காலத்தை முடித்தவுடன், அவர் விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும். அமீரக சட்டத்தின் படி, ஒரு மாதத்திற்கு இரண்டு நாள் வீதம் அவர் ஆறு மாதத்திற்கு 12 நாட்கள் வருடாந்திர விடுமுறையைப் பெறலாம். இந்த கணக்கானது அவர் ஒரு வருடத்தை பூர்த்தி செய்யும் வரையிலும் பொருந்தும்.

எனினும், அந்த ஊழியர் தனது ஒரு வருட சேவையை முழுமையாக நிறைவு செய்திருந்தால், வருடத்திற்கு 30 நாட்கள் என வருடாந்திர விடுப்புக்கு அவர் தகுதியுடையவர் ஆவார். ஒருவேளை, வருடாந்திர விடுப்பைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அந்த ஊழியர் வேலையை விட்டு வெளியேறினால், அவர் பணிபுரிந்த வருடங்களின் அடிப்படையில் வருடாந்திர விடுப்புக்கான சம்பளத்தை பெறவும் அவருக்கு உரிமை உண்டு.

ஏற்கனவே, கடந்த ஆண்டு பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வந்த புதிய தொழிலாளர் சட்டம், முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான பணி உறவின் பல்வேறு அம்சங்களை புதுப்பித்துள்ளது. குறிப்பாக, இந்தச் சட்டத்தின் பிரிவு 29, ஒரு ஊழியருக்குத் தகுதியான வருடாந்திர விடுப்புகள் பற்றிய விரிவான சட்டங்களை வழங்குகிறது.

ஆர்டிகிள் 29 கூறும் சட்டம்:

1. ஒவ்வொரு வருட சேவைக்கும் வருடத்திற்கு 30 நாட்கள் சம்பளத்துடன் அனைத்து ஊழியர்களும் வருடாந்திர விடுப்பு எடுக்கலாம்.

2. சேவைக் காலம் ஆறு மாதங்களுக்கும் அதிகமாகவும் ஒரு வருடத்திற்கும் குறைவாகவும் இருக்கும் ஊழியர்கள் மாதத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் வருடாந்திர விடுமுறை எடுக்க அனுமதி உண்டு.

3. ஊழியர் தனது வருடாந்திர விடுப்பை பயன்படுத்துவதற்கு முன்பு நிறுவனத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில், கடந்த ஆண்டுகளின் வருடாந்திர விடுப்புக்கான ஊதியத்தைப் பெற அவருக்கு உரிமை உண்டு.

4. முதலாளியின் சேவையில் தொழிலாளர் செலவழித்த சரியான வேலை நேரத்தின் படி, பகுதி நேர பணியாளர்களும் வருடாந்திர விடுப்பு எடுக்கலாம். ஆனால், அதற்கு வேலை ஒப்பந்தத்தில் வேலை நேரம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

5. பணியாளருடனான ஒப்பந்தத்தின் படி, விடுப்புத் தேதிகளை முதலாளி நிர்ணயிக்கலாம் அல்லது வேலையின் சுமூகமான முன்னேற்றத்திற்காக ஊழியர்களிடையே வருடாந்திர விடுமுறையை சுழற்சி முறையில் வழங்கலாம்.

6. வருடாந்திர விடுப்பு நாட்களில் ஊதியம் பெற பணியாளருக்கு உரிமை உண்டு.

7. ஒரு பணியாளர், முதலாளியின் ஒப்புதலுடன் தனது வருடாந்திர விடுப்பு சம்பள நிலுவை அல்லது அதன் நாட்களை அடுத்த ஆண்டுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

8. விதிமுறைகளின் படி, ஊழியர் அந்த விடுமுறையை அடுத்த ஆண்டிற்கு சேர்த்து எடுத்துக் கொள்ளவோ அல்லது விடுப்புக்குப் பதிலாக ஊதியம் பெறவோ விரும்பினால் தவிர, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, வருடாந்திர விடுப்பைப் பயன்படுத்துவதை முதலாளி தடுக்க முடியாது.

Related Articles

Back to top button
error: Content is protected !!