அமீரக செய்திகள்

UAE: வேலையின்மை காப்பீட்டு திட்டம் கட்டாயம்.. மீறும் தொழிலாளர்களுக்கு 400 திர்ஹம் அபராதம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீரென வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு புதிய காப்பீடு திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த திட்டமானது ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இந்த நடைமுறையானது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரக ஊழியர்கள் இந்த கட்டாய வேலையின்மை காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாததற்காக அபராதத்தை எதிர்கொள்வார்கள் என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த திட்டத்தின் படி, தனியார் மற்றும் மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக வேலையின்மை காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆனால், முதலீட்டாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள், 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் மற்றும் புதிய வேலையில் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 16,000 திர்ஹம்ஸிற்கும் குறைவான அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்கள் மாதத்திற்கு 5 திர்ஹம் அல்லது வருடத்திற்கு 60 திர்ஹம் மற்றும் VAT ஐ பிரீமியமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் 16,000 திர்ஹம்ஸிற்கு மேல் அடிப்படை சம்பளம் உள்ள பணியாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் மாதம் 10 திர்ஹம் அல்லது ஆண்டு பிரீமியம் 120 திர்ஹம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலையை இழந்தால் அந்நபருக்கு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு சராசரி அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம் இழப்பீடு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பாலிசி காலம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தை துபாய் இன்சூரன்ஸிலிருந்து செலுத்தினால் சந்தா இலவசம் என்றும், ஆனால் எக்ஸ்சேஞ்ச் ஹவுஸ், டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் போன்ற பிற சேனல்கள் மூலம் செலுத்தினால் சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யத் தவறினால், ஊழியர் மீது 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட தகவலில் “ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யத் தவறினால் மற்றும் மூன்று மாதங்களுக்கும் மேலாக எந்தப் பங்களிப்பும் செலுத்தவில்லை என்றால், அவர்களுக்கு கூடுதலாக 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வரும் 30 ஜூன் 2023க்கு முன் ஊழியர்கள் திட்டத்தில் சேர வேண்டும், இல்லையெனில் அவர்கள் மீது 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவார்கள் என்று ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் கால் சென்டர் பிரதிநிதியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு இந்தத் திட்டத்திற்கான பங்களிப்புகளை ஊழியர்கள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டப் பலன்களை ஊழியர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது வேலையினை இழந்த நாளிலிருந்து தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை பெறலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கூடுதலாக முதலாளிகள் தங்கள் ஊழியர்களை காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், அல்லது காப்பீடு திட்டத்திற்கான பங்களிப்புகளை முதலாளிகள் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திட்டத்தில் பதிவு செய்வதற்கான கடமையை தங்கள் ஊழியர்களுக்கு நினைவூட்டுமாறு முதலாளிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!