அமீரக செய்திகள்

பகுதியளவு செயல்படத் தொடங்கிய துபாய் ஏர்போர்ட்.. பயணிகளுக்கு மட்டும் அனுமதி..!!

அமீரகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக நாட்டின் பெரும்பாலான இடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கனமழை காரணமாக துபாயில் உள்ள பல்வேறு பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளம் போல் காட்சியளித்தன. அத்துடன் துபாய் சர்வதேச விமான நிலையத்தை சுற்றி பெய்த கனமழையால் ஓடுபாதை முழுவதும் மழைநீர் தேங்கியது.

இதனால் துபாயில் இயக்கப்படும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று துபாய்க்கு வரும் பல்வேறு விமானங்கள் திருப்பி விடப்பட்டும் துபாய் விமான நிலையத்திற்கு தாமதமாக விமான சேவைகள் இயக்கப்பட்டும் வந்தன.

பின்னர் செவ்வாய்க்கிழமை முழுவதும் பெய்த அதிதீவிர கனமழையால் நிலைமை மிகவும் மோசமானதையடுத்து அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகள் விமான நிறுவனத்துடன் சரிபார்த்த பின்னரே விமான நிலையத்திற்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று மழையின் தீவிரம் குறைந்த பின்னர் ஒரு சில விமானங்கள் தற்பொழுது இயக்கப்பட்டு வருவதாக விமான நிலையம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் டெர்மினல் 1-ல் வந்திறங்குவதற்காக வழிவகை செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சில தாமதங்கள் மற்றும் இடையூறுகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் டெர்மினல் 1-ல் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் நிலையில், விமானம் புறப்படுவதற்கான நிலையை உறுதி செய்த பயணிகள் மட்டும் டெர்மினல் 1-ற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

மேலும் விமான நிறுவனத்துடன் சரிபார்க்காமல் தாங்கள் பயணிக்கும் விமானத்தின் நிலையை தெரிந்து கொள்ளாமல் பயணிகள் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் விமான சேவைகள் முழுமையாக இயல்பு நிலைக்கு வராமல் இருக்கும் பட்சத்தில் நிலைமையை முழுமையாக மீட்டெடுக்க விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!