வளைகுடா செய்திகள்

சவூதி: வழிபாட்டாளர்கள் மக்காவின் புனித மசூதியில் உறங்க வேண்டாம்..!! அமைச்சகம் வலியுறுத்தல்..!!

சவுதி அரேபியா அரசானது, மெக்காவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மசூதியில் உம்ரா யாத்ரீகர்கள் உறங்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கூறியுள்ள ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், உம்ரா யாத்ரீகர்கள் மற்றும் மசூதிக்கு வருபவர்கள் புனித மசூதியில் சாய்ந்து தூங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த நடைமுறை புனித தலத்தில் விதிமுறைகளை மீறுவதாக உள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது குறித்து ட்விட்டரில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சகம் “அல்லாஹ்வின் விருந்தினரே, நீங்கள் குறிப்பாக தாழ்வாரங்கள், பிரார்த்தனை இடங்கள், அவசரகால வண்டிகள் செல்லும் பாதைகள் அல்லது உடல் ஊனமுற்றோருக்காக நியமிக்கப்பட்ட பகுதியில் சாய்ந்து இருப்பதோ அல்லது படுப்பதையோ தவிர்ப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மக்காவிற்கு உம்ரா மற்றும் பிரார்த்தனைகளைச் செய்ய வருகிறார்கள். எனவே, மசூதியில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சலசலப்பு மற்றும் கூட்டத்தை தவிர்க்குமாறு அமைச்சகம் முன்னதாக வழிபாட்டாளர்களை அறிவுறுத்தியது.

மேலும், இங்கு பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமெனவும், பாதுகாப்பு ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க காவலர்களுடன் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் சென்ற ஆண்டு  உம்ராவிற்காக வருகை புரிந்து இருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு 10 மில்லியன் யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன், வெளிநாட்டு முஸ்லிம்கள் உம்ரா செய்ய நாட்டிற்கு வருவதற்கு சவுதி அரேபியா பல வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உம்ரா விசாவினை முப்பது நாட்களில் இருந்து 90 நாட்களாக நீட்டித்துள்ளது போன்ற முக்கியமான சலுகைகள் அடங்கும். அது தவிர விசா வைத்திருப்பவர்கள் அனைத்து தரை, வான் மற்றும் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைவதற்கும் எந்த விமான நிலையத்திலிருந்தும் வெளியேறவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைனில் முன்னதாகவே அப்ளை செய்வதன் மூலம் தனிப்பட்ட, விசிட் மற்றும் சுற்றுலா விசாக்கள் போன்ற பல்வேறு வகையான நுழைவு விசாக்களை வைத்திருக்கும் முஸ்லிம்கள் உம்ராவை மேற்கொள்ளவும், மதீனாவில் உள்ள நபிகள் நாயகத்தின் மசூதியில் அமைந்துள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கல்லறை அமைந்துள்ள அல் ரவ்தா அல் ஷரீஃபாவிற்குச் செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!