அமீரக செய்திகள்

அமீரகத்தில் இடி, மின்னல், மழையுடன் துவங்கிய புத்தாண்டு.. மக்கள் உற்சாகம்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டானது, இடி, மின்னல், மழை போன்ற வானிலையுடன் உற்சாகமாக தொடங்கியுள்ளது.

புத்தாண்டு தினமான சனிக்கிழமை காலை அல் அய்ன் மற்றும் அபுதாபியின் பிற பகுதிகள், துபாயின் பெரும்பாலான பகுதிகள், ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.

மேலும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கையைப் பகிர்ந்ததுடன் இன்று இரவு 11 மணி வரை நிலையற்ற வானிலை இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

அரபிக்கடலை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் கண்காணிக்கப்பட்டதாகவும், இதனால் மேகமூட்டமான வானிலை மற்றும் பலத்த காற்று மணிக்கு 45 கிமீ வேகத்தில் வீசுவதாகவும் NCM தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் வீசும் பலத்த காற்றினால் தெரிவுத்திறன் (visibility) குறைவது மற்றும் தூசிப் புயல்கள் ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் வெள்ளம் ஏற்படக்கூடிய வாதிகள் அல்லது பள்ளத்தாக்குகளைச் சுற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

NCM பொதுவாக வெப்பச்சலன மேகங்களை கண்காணித்து கிளவுட் சீடிங் (cloud seeding) முறையை பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகமதில் மழைப்பொழிவை அதிகரிக்க முயற்சியை மேற்கொள்ளும். தற்போதுள்ள வானிலையின் அடிப்படையில் வெப்பச்சலன மேகங்களின் உருவாக்கத்தைப் பொறுத்து வரும் நாட்களில் கிளவுட் சீடிங் செய்வதற்காக விமானங்கள் அனுப்பப்படும் என்று NCM அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமீரகத்தில் சில நேரங்களில் மிதமான முதல் பலத்த காற்று மேக உருவாக்கத்துடன், தூசி மற்றும் மணலை வீசச் செய்து, கிடைமட்டத் தெரிவுநிலையைக் குறைக்கும். மணிக்கு 45 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் வார இறுதி விடுமுறைக்கு கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு NCM பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!