அமீரக செய்திகள்

UAE: ரமலான் மாதத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பை வெளியிட்ட அதிபர்..!!

அமீரகத்தின் மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் 70 சதவீத ஊழியர்கள் ரமலான் மாத வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று ஒரு அறிவிப்பை அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் வெளியிட்டுள்ளார். மீதமுள்ள 30 சதவீத பணியாளர்கள் அந்த நாட்களில் அலுவலகங்களில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் தேர்வு எதுவும் இல்லாத சமயங்களில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்து கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசாங்க ஊடக அலுவலகத்தில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் “ரமலான் மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில் மத்திய அரசு ஊழியர்களின் உத்தியோகபூர்வ வேலை நேரம் 70 சதவீதம் வீட்டில் இருந்தபடியும், 30 சதவீத அலுவலகங்களில் இருந்தபடியும் பணிபுரிய வேண்டும் என்றும், வெள்ளிக்கிழமைகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வீட்டில் இருந்த படியே கல்வி பயில்வதற்காக நடைமுறை இருக்க வேண்டும் என்றும் தலைவர் உத்தரவிட்டுள்ளார்” என்று அது கூறியது.

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அவர்களும் அதிபரை பின்பற்றி, துபாய்க்கும் அதே தொலைதூர வேலை நேரத்தை அறிவித்துள்ளார். ஏற்கெனவே துபாய் அரசாங்க மனிதவளத் துறையானது (DGHR) ரமலான் காலங்களில் வேலை நேரம் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மதியம் 2:30 மணி வரையிலும், வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் இருக்கும் என்று கூறியிருக்கின்றது.

அதேபோல் தனியார் துறை ஊழியர்களுக்கு ரமலானை முன்னிட்டு குறுகிய வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஐக்கிய அரபு அமீரகம் ரமலான் மாதம் மார்ச் 23 ம் தேதி அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் சரியான தேதி மார்ச் 22 இரவு பிறை பார்ப்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!