அமீரக செய்திகள்

அபுதாபியில் இன்று நடக்கவுள்ள இரண்டாவது மிகப்பெரிய ஏலம்.. ஆடம்பர நம்பர் பிளேட் மற்றும் மொபைல் எண்கள் வெளியீடு..!!

துபாயில் ‘மோஸ்ட் நோபல் நம்பர்ஸ்’ அறக்கட்டளையானது கடந்த ஏப்ரல் 16 ம் தேதி சனிக்கிழமை துபாயின் சிறப்பு வாகன பதிவு எண்கள் மற்றும் பிரத்யேக மொபைல் எண்கள் மீதான ஏலத்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாவது மிகப்பெரிய ஏலத்தை “சையத் மனிதாபிமான தினம் ( Zayed Humanitarian Day)” ஆக அனுசரிக்கப்படும் இன்று ஏப்ரல் 20 ம் தேதி அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸில் நடத்த உள்ளது.

அபுதாபியில் நடத்தப்படவுள்ள இந்த மிகப்பெரிய ஏலத்தில் ‘2’ என்ற அபுதாபியின் ஒற்றை இலக்க வாகன பதிவு எண் கொண்ட ஆடம்பர நம்பர் பிளேட் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் அதனுடன் இரட்டை இலக்க வாகன பதிவு எண்களான 11, 20, 99 போன்ற ஆடம்பர நம்பர் பிளேட்டுகளும் மற்றும் 999 எனும் மூன்று இலக்க ஆடம்பரமான நம்பர் பிளேட்டும் அடங்கும்.

மேலும் கூடுதலாக, துபாயில் நடத்தப்பட்டதை போன்று அமீரகத்தின் மொபைல் ஆபரேட்டர் நிறுவனங்களான Etisalat மற்றும் du வின் பிரத்யேகமான 10 சிறப்பு மொபைல் எண்களும் இந்த ஏலத்தில் வைக்கப்படவுள்ளது. அபுதாபியில் இன்று நடக்கவுள்ள இந்த மிகப்பெரிய ஏலம் அபுதாபி காவல்துறை, Etisalat மற்றும் du ஆகியவை இணைந்து நடத்தவுள்ளது.

இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான “ஒரு பில்லியன் மீல்ஸ்” பிரச்சாரத்திற்கு வழங்கப்படவுள்ளது. இந்த பிரச்சாரம் பிற நாடுகளில் உள்ள பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதை நோக்கமாக கொண்டு துபாய் ஆட்சியாளரால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

துபாயில் சனிக்கிழமை நடத்தப்பட்ட மோஸ்ட் நோபல் நம்பர்ஸ் அறக்கட்டளை ஏலத்தில், துபாயின் ஒற்றை இலக்க வாகன பதிவு எண் AA8 என்ற நம்பர் பிளேட் 35 மில்லியன் திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.70 கோடி) என்ற மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் இதுவே உலகின் மூன்றாவது விலையுயர்ந்த கார் நம்பர் பிளேட் என்ற சாதனையையும் AA8 நம்பர் பிளேட் படைத்தது. அதே போன்று எடிசலாட்டின் டைமண்ட் பிளஸ் மொபைல் நம்பரான 0549999999 என்ற எண் ஆனது, 5 மில்லியன் திர்ஹம்ஸ் எனும் பெரும் தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:: துபாயில் நடந்த ஏலத்தில் ரூ.70 கோடிக்கு விற்கப்பட்ட கார் நம்பர் பிளேட்.. ரூ.10 கோடிக்கு விற்கப்பட்ட மொபைல் நம்பர்..!!

Related Articles

Back to top button
error: Content is protected !!