அமீரக செய்திகள்

அமீரகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்து.. தொழிற்சாலை, குடியிருப்பு கட்டிடம், வாகனம் அனைத்திலும் பரவிய தீ.. 4 எமிரேட்டுகளில் இருந்தும் வந்து போராடிய பாதுகாப்பு குழு..!!

அஜ்மானில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பயங்கர தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அஜ்மானில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீவிபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியினால் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்த செய்தியில் இந்த தீவிபத்தானது இன்று அதிகாலை 3.30 மணியளவில் அஜ்மானில் இருக்கக்கூடிய ஒரு எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்டதாக அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட தீயானது எண்ணெய் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம், அச்சகம், கிடங்குகள் மற்றும் பல கார்களுக்கும் விரைவாக பரவியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பெரியளவிலான தீவிபத்தினால் இதனை கட்டுப்படுத்த அஜ்மான் மட்டுமல்லாது துபாய், ஷார்ஜா மற்றும் உம் அல் குவைன் எமிரேட்டுகளில் இருந்தும் வந்த உதவிக் குழுக்களுடன், குடிமைத் தற்காப்புப் பிரிவின் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரால் பகிரப்பட்ட காணொளியில், பெரும் புகை மூட்டங்களுக்கு மத்தியில் எண்ணெய் தொழிற்சாலையில் தீப்பிழம்புகள் எரிவது காட்டப்பட்டுள்ளது. அத்துடன் தீயணைப்பு வீரர்கள் அதைக் கட்டுக்குள் கொண்டுவர போராடியதும் காணொளியில் காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தீவிபத்தினால் அந்த கட்டிடம் பலத்த சேதமடைந்ததுடன் குறைந்தது 12 வாகனங்களாவது தீக்கிரையாகியிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!