அமீரக செய்திகள்

அமீரகத்தின் ‘எமிரேடிசேஷன் திட்டம்’.. தனியார் நிறுவனங்களில் அமீரக குடிமக்களை பணியமர்த்துவது இனி கட்டாயம்.. தவறினால் அபராதம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை சார்ந்த நிறுவனங்களில் அமீரக குடிமக்களை பணியமர்த்தும் விதமாக ஒரு புதிய திட்டத்தை அமீரக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி அமீரக அரசின் 2 சதவீத எமிரேடிசேஷன் விகிதத்திற்கு இணங்காத தனியார் நிறுவனங்கள் ஆண்டுதோறும் அதிக அபராதம் செலுத்தும் என்றும் அரசு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக அரசின் எமிரேடிசேஷன் தொடர்பான சமீபத்திய அமைச்சரவைத் தீர்மானங்களை குறித்து மனித வளங்கள் மற்றும் குடியரசியல் அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல் அவார் கூறுகையில், 50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்கள் உயர் திறன்மிக்க வேலைகளில் 2 சதவீத எமிரேட்டியர்களைக் (அமீரக குடிமக்கள்) கொண்டிருக்க வேண்டும் என்றுள்ளார்.

மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 சதவீத எமிரேடிசேஷன் விகிதத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த திட்டத்திற்கு இணங்காத நிறுவனங்கள் ஒவ்வொரு வேலையில்லாத அமீரக குடிமகனுக்கும் மாதம் ஒன்றுக்கு 6,000 திர்ஹம்ஸ் என்ற அடிப்படையில் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அபாரதமானது ஜனவரி 2023 முதல் ஒவ்வொரு ஆண்டும் 1,000 திர்ஹம்ஸ் அதிகரிக்கும் என்றும், 2026 ஆம் ஆண்டுக்குள் அபராதம் மாதம் 10,000 திர்ஹம்களை எட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், தனியார் துறையில் தற்போது 31,000 எமிரேட்டியர்கள் பணிபுரிவதாகவும், 2 சதவீத எமிரேசேஷன் விதியின்படி ஒவ்வொரு ஆண்டும் அமைச்சகம் வழங்கும் 1.2 மில்லியன் பணி அனுமதியில் இருந்து 12,000 வேலைகளை எமிரேட்டிகளுக்கு உருவாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை, NAFIS திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் எமிரேடிசேஷன் விகிதத்தை 2 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளித்திருந்தது. இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டில் தனியார் துறை ஊழியர்களில் 10 சதவீதம் பேர் எமிரேட்டிகளாக இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனை ஊக்குவிக்கும் விதமாக வேலை அனுமதி மற்றும் விசாக்களை வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் கட்டணத்தில் 80 சதவீதம் குறைப்பு, ஓய்வூதிய திட்டங்கள், 24 பில்லியன் திர்ஹம்ஸ் சம்பள ஆதரவு திட்டங்கள் உட்பட, அதிக எமிரேடிசேஷன் விகிதத்தைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகளையும் அமீரக அரசு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!