அமீரக செய்திகள்

UAE: மத்திய அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் ‘ஈத் அல் பித்ர்’ விடுமுறையை அறிவித்த அமீரக அரசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் வரவுள்ள இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் பித்ரை முன்னிட்டு, அமீரகத்தில் பணிபுரியும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் அல் பித்ர் விடுமுறையை அமீரக அரசு நேற்று அறிவிதித்திருந்தது. அமீரக அரசின் இந்த அறிவிப்பின்படி, இஸ்லாமிய நாட்காட்டியான ஹிஜ்ரி காலண்டரின் அடிப்படையில் ரமலான் மாதம் 29 முதல் ஷவ்வால் மாதம் 3 வரையிலும் விடுமுறையாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், அமீரகத்தின் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் 9 நாட்கள் என மிகவும் நீண்ட ஈத் அல் பித்ர் விடுமுறையை அமீரக அரசு நேற்று வியாழக்கிழமை இரவு அறிவித்துள்ளது. இதில் அமீரகத்தில் உள்ள அமைச்சகங்கள் மற்றும் கூட்டாட்சி அமைப்புகள் ஆகியவை அடங்கும்.

அமீரகத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறையை அறிவித்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 9 நாட்கள் விடுமுறையின் மூலம் அவர்கள் மிகவும் நீண்ட ஈத் ஈத் அல் பித்ர் விடுமுறையை கொண்டாடவுள்ளனர்.

அமீரகத்தை பொறுத்தவரை, ரமலான் நோன்பானது 30 நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் அதிகபட்சம் 5 நாட்கள் வரை (ஏப்ரல் 30 முதல் மே 4 வரை) ஊதியத்துடன் கூடிய விடுப்பையும், நோன்பானது 29 நாட்களுடன் முடிவடையும் பட்சத்தில் 4 நாட்கள் விடுமுறையையும் (ஏப்ரல் 30 முதல் மே 3 வரை) பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஊழியர்கள் பெறுவார்கள்.

ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் கூடுதலாக மே 5 (வியாழக்கிழமை) மற்றும் மே 6 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரு தினங்களும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 30 முதல் மே 8 வரை என 9 நாட்கள் அவர்களுக்கு நீண்ட விடுமுறையாக இருக்கும்.

ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்த வரையிலும், வரும் மே மாதம் 2 ம் தேதி ஈத் அல் பித்ர் தினமாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பிறை பார்ப்பதன் அடிப்படையில் இது மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!