அமீரக செய்திகள்

துபாயில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு புதிய சேமிப்பு திட்டத்தை அறிவித்த துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான்..!!

துபாய் அரசின் பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கான ஒரு ‘புதிய சேமிப்பு திட்டம்’ ஒன்றை துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது. துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிறகு ஷேக் ஹம்தான் அவர்களால் இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் அரசாங்கத்தால் படிப்படியாக செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தில் பொதுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல முதலீட்டு திட்டங்கள் (ஷரியா சட்டத்திற்கு இணக்கமானவை உட்பட) வழங்கப்படும் என்றும், தங்களின் சேவையின் இறுதி பலன்களை முதலீடு செய்ய விரும்பாத ஊழியர்களுக்கு மூலதன பாதுகாப்பை உறுதி செய்யும் விருப்பங்களும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் குறித்து ஷேக் ஹம்தான் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “துபாய் அரசாங்கத்தின் முன்முயற்சிகள் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும் சேவையின் இறுதி பலன்களில் இது ஒரு முக்கியமான கூடுதல் பலனாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அரசு துறையில் பணிபுரியக்கூடிய ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் அல்லது குடியிருப்பாளர்கள் என அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதை இந்தத் திட்டம் உறுதி செய்யும் என்றும், ஊழியர்களுக்கு பல நிதிச் சலுகைகளையும் குறிப்பாக பல்வேறு நிதி இலாகாக்களில் சேமிக்கும் வாய்ப்பையும் வழங்கும் என்றும் ஷேக் ஹம்தான் குறிப்பிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக கூறுகையில், “சேமிப்புத் திட்டம் என்பது சிறந்த வேலை மற்றும் வாழ்க்கைத் தரத்தை வழங்கும் முன்னணி நகரமாக துபாயின் நிலையை ஒருங்கிணைக்க பல்வேறு துறைகளில் அதிக திறமையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு புதிய படியாகும்” என்றும் ஷேக் ஹம்தான் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் கூற்றுப்படி, துபாய் சர்வதேச நிதி மையம் பல கவர்ச்சிகரமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் சர்வதேச முதலீட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேமிப்பு திட்டத்தை மேற்பார்வையிடும் என்று தெரிகிறது. மேலும் சிறந்த திறமையாளர்களை ஈர்க்கும் ஒரு கவர்ச்சிகரமான தொழில் இடமாக துபாய் இருப்பதையும் இந்த முயற்சி உறுதி செய்யும் எனவும், இது ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு மூலம் நிர்வகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுளளது.

துபாய் அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த புதிய சேமிப்பு திட்டமானது, தனியார் துறை நிறுவனங்களுக்கு விருப்பமானதாக இருக்கும் எனவும், நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி மற்றும் தொடர்புடைய கூட்டாட்சி மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தனியார் துறைக்கு தன்னார்வ அடிப்படையில் புதிய அமைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் இது ஆய்வு செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!