அமீரக செய்திகள்

புர்ஜ் கலீஃபா புத்தாண்டு கொண்டாட்டம்..!! RTA மேற்கொள்ளும் போக்குவரத்து மாற்றங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்கள்..!!

உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாய் புர்ஜ் கலீஃபாவில் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு வருடமும் புர்ஜ் கலீஃபாவில் புத்தாண்டு தின வான வேடிக்கைகள் நடைபெறுவதைக் காண புர்ஜ் கலீஃபாவை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் ஒவ்வொரு வருடமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வண்ணம் அதன் அருகாமையிலுள்ள சாலைகள் மூடப்பட்டு காவல்துறையினால் கண்காணிக்கப்படும்.

அதே போன்று, இந்த வருடமும் குறிப்பிட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என்றும், கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையாளர்கள் அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புத்தாண்டு கண்காட்சி நிகழ்விற்காக துபாய் டவுன்டவுன் (downtown dubai) பகுதியைச் சுற்றி பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விரிவான திட்டத்தை அதிகாரிகள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர்.

துபாய் காவல்துறை மற்றும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) புர்ஜ் கலீஃபாவைச் சுற்றியுள்ள பகுதிககளில் சுலபமான போக்குவரத்தை உறுதி செய்வதற்கான விரிவான போக்குவரத்துத் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் அனைத்து பயனர்களும் RTA அறிவித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சாலை மூடல்கள்

டிசம்பர் 31 ஆம் தேதி, அல் அஸாயில் சாலையானது (Al Asayel Road) மாலை 4 மணிக்கு மூடப்பட்டு பேருந்துகள் மற்றும் அவசரகால வாகனங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் என்றும், ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்வர்டு ஸ்ட்ரீட் (Sheikh Mohammed bin Rashid Boulevard street) அங்கிருக்கும் பார்க்கிங் முடிந்தவுடன் மாலை 4 மணி முதல் மூடப்படும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. அத்துடன் முகமது பின் ரஷீத் Bld மற்றும் பைனான்சியல் சென்டர் சாலையின் கீழ் தளம் மாலை 4 மணி முதல் மூடப்படும் என்றும், பைனான்சியல் சென்டர் சாலையின் மேல் தளம் இரவு 9 மணிக்கு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாலை 6 மணி முதல் தொடங்கி பிசினஸ் பே (Business Bay) மற்றும் துபாய் உலக வர்த்தக மைய (Dubai World Trade Center) சந்திப்புகளில் இருந்து முஸ்தக்பால் சாலை (Mustaqbal Road) படிப்படியாக மூடப்படும் என்றும், இரவு 8 மணிக்கு அல் சுகுக் தெரு (Al Sukuk Street) மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜுமேரா, அல் சஃபா மற்றும் பிசினஸ் பே ஆகிய இடங்களில் உள்ள துபாய் வாட்டர் கணல் பெடெஸ்ட்ரியன் பிரிட்ஜ்களில் (Dubai Water Canal pedestrian bridges) உள்ள லிஃப்ட் வியாழக்கிழமை முதல் மூடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடம்

அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு பாதசாரி பகுதிகளைச் (pedestrian areas) சுற்றி கூடுதல் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றும், மேலும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக சாலைகள் மூடப்படுவதற்கு முன்பு தங்கள் பயணத்தை சீக்கிரம் தொடங்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு Emaar பகுதி / துபாய் மாலில் ஜபீல் பார்க்கிங் பகுதி (Zabeel extension parking area) உட்பட 16,700 பார்க்கிங் இடங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பேருந்துகள்

பார்வையாளர்கள் பொது போக்குவரத்தினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் மிகவும் அறிவுறுத்தியுள்ளனர். நிகழ்வு நடைபெறும் இடத்திலிருந்து மெட்ரோ நிலையங்களுக்கு பார்வையாளர்களைக் கொண்டு செல்வதற்கு RTA-வானது 200 பேருந்துகளை இலவசமாக ஒதுக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஸ்க்ரீன் அலெர்ட்ஸ்

சாலைகள் மூடப்படும்போது ஓட்டுனர்களை எச்சரிக்கவும், பைனான்சியல் சென்டர் சாலை மற்றும் ஷேக் முகமது பின் ரஷீத் Bld-யில் போக்குவரத்து விளக்குகளை கண்காணிக்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகமான நேரங்களில் போக்குவரத்தை சீராக்கவும் RTA, Emaar கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைந்து ஸ்மார்ட் ஸ்க்ரீன்களைப் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் மெட்ரோ

புர்ஜ் கலீஃபா / துபாய் மால் மெட்ரோ நிலையம் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் மறுநாள் (ஜனவரி 1) காலை 6 மணி வரை மூடப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு RTA மெட்ரோ பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அந்த நேரங்களில், பயணிகள் பைனான்சியல் சென்டர் மெட்ரோ நிலையம் அல்லது பிசினஸ் பே மெட்ரோ நிலையத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், துபாய் மெட்ரோவின் ரெட் லைன் வியாழக்கிழமை (டிசம்பர் 31) அதிகாலை 5 மணி முதல் சனிக்கிழமை (ஜனவரி 2) அதிகாலை 1 மணி வரை செயல்படும் என்றும், கிரீன் லைன் தனது சேவையை வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 1 மணி வரை இயக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெடஸ்ட்ரியன் கிராஸ்ஸிங்ஸ்

பாதசாரிகள் அல்லது கால்நடையாக அந்த பகுதிக்குச் செல்ல விரும்புவோர் புர்ஜ் கலீஃபா / துபாய் மால் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள ஷேக் சையத் சாலையில் இருக்கும் பெடஸ்ட்ரியன் கிராஸ்ஸிங்சைப் (pedestrian crossings at Sheikh Zayed Road) பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

RTAவின் இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் முகமது அல் டையர் அவர்கள் கூறியதாவது: “முழு பொது போக்குவரத்து அமைப்பிற்கான ஒரு விரிவான திட்டம், குறிப்பாக புர்ஜ் கலீஃபாவைச் சுற்றி உள்ள போக்குவரத்து அமைப்பிற்கான திட்டம், RTAவில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மற்றும் அல் பார்ஷாவில் உள்ள துபாய் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் மையத்தின் (Dubai Intelligent Traffic Systems Centre) மூலம் அமல்படுத்தப்படும். இந்த மையம் போக்குவரத்து இயக்கங்களின் செயல்திறனை மேம்படுத்துவதோடு விபத்துக்களுக்கு விரைவாக பதிலளிக்கும். RTA திட்டம் பொது போக்குவரத்து அமைப்பில் கவனம் செலுத்துவதோடு, சமூக தூரத்தை பராமரித்தல் மற்றும் முக கவசங்களை அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

QR codes

புர்ஜ் கலீஃபாவில் நடைபெறும் புத்தாண்டு வான வேடிக்கைகளை அதன் அருகிலிருந்து கண்டு கழிக்க U By Emaar அப்ளிகேஷனில் பதிவுசெய்த பார்வையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட QR குறியீட்டைக் கொண்டு செல்வதை பார்வையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். டவுன்டவுன் துபாயை அணுக இப்பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்ட ஐந்து வாயில்கள் வழியாக செல்லலாம் என்றும், மேலும் QR குறியீடு உள்ளவர்கள் மட்டுமே வியூவிங் பாய்ண்ட்ஸ் என சொல்லப்படும் அங்கிருக்கும் பார்க்கும் இடங்களுக்குச் செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் NYE வாழ்த்துக்கள்

தங்கள் வீடுகளில் இருந்தே புர்ஜ் கலீஃபா வான வேடிக்கை நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்புவோர் www.mydubainewyear.com என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களைக் காண உலகெங்கிலும் இருந்து 50,000 பேர் வரை ஜூம் அழைப்புகளில் (Zoom calls) சேருவார்கள் என்று Emaar கூறியுள்ளது. அத்துடன் #BurjWishes2021 என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தி புர்ஜ் கலீஃபாவின் ட்விட்டர், பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் நெட்டிசன்கள் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த செய்தியானது 35 எழுத்துக்களில் (35 characters) இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!