அமீரக செய்திகள்

ஏழைகளுக்கு உணவளிக்கும் “1 பில்லியன் மீல்ஸ்” திட்டத்திற்கு 2 மில்லியன் திர்ஹம்ஸ் நன்கொடை அளித்த லூலூ தலைவர்..!!

உலகெங்கிலும் உள்ள 50 நாடுகளில் உள்ள பின்தங்கிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்கான பிராந்தியத்தின் மிகப்பெரிய பிரச்சாரமான துபாய் ஆட்சியாளர் அறிவித்துள்ள ‘1 பில்லியன் மீல்ஸ்’ முயற்சிக்கு ஆதரவாக அமீரகத்தின் லூலூ குரூப் இன்டர்நேஷனல், 2 மில்லியன் திர்ஹம்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 பில்லியன் மீல்ஸ் திட்டத்தை முகமது பின் ரஷித் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகளானது (MBRGI) UN உலக உணவுத் திட்டம் (WFP), முகமது பின் ரஷித் அல் மக்தூம் தொண்டு மற்றும் மனிதாபிமான நிறுவனம் (MBRCH), பிராந்திய உணவு வங்கி (FBRN) மற்றும் பிற உலகளாவிய மனிதாபிமான மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள பின்தங்கிய சமூகங்களில் உள்ள ஏழை பயனாளிகளுக்கு ஆதரவு மற்றும் உணவு பார்சல்களை நேரடியாக வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

1 பில்லியன் மீல்ஸ் திட்டத்திற்கு, தனிநபர்கள், நிறுவனங்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் உட்பட, வணிக சமூகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக மற்றும் வெளிநாடுகளில் உள்ள தனியார் துறையினர் உட்பட அனைவரும் பங்களிப்பு தரலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியின் மூலம் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களை ஆதரிப்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது.

லூலூ குரூப் இன்டர்நேஷனலின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூசுப் அலி தனது பங்களிப்பு பற்றி கூறுகையில் “இந்த மாபெரும் மனிதாபிமான முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமையும், பாக்கியமும் அடைகிறோம். ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், அனைத்துத் தொண்டுகளிலும் சிறந்தது பசித்தவருக்கு உணவளிப்பது என்றும், எல்லாவற்றிலும் சிறந்தது மற்றவர்களை நினைத்துப் பார்ப்பதுதான் என்றும் சரியாகக் கூறியுள்ளார். இந்த மாபெரும் தேசத்தின் தொலைநோக்கு பார்வை கொண்ட ஆட்சியாளர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் உலகெங்கிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்”.

“லூலூ குழுமத்தின் பங்களிப்பானது, இந்த முன்முயற்சியின் கீழ் உள்ள சமூகங்களில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு சத்தான உணவை தயாரிப்பதற்கு தேவையான அடிப்படை பொருட்களை உள்ளடக்கும்” என தெரிவித்துள்ளார்.

“1 பில்லியன் மீல்ஸ்” முயற்சியில் பங்களிக்க விரும்பும் நன்கொடையாளர்கள் பின்வரும் நன்கொடை சேனல்கள் மூலம் 1 பில்லியன் மீல்ஸ் பிரச்சாரத்திற்கு பங்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை

பிரச்சாரத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.1billionmeals.ae மற்றும் எமிரேட்ஸ் NBD இல் இந்த உணவுப் பிரச்சாரத்தில் பங்களிக்க பரிமாற்றம் செய்யப்படும் வங்கி கணக்கு எண்: AE300260001015333439802 மூலம் நன்கொடை அளிக்கலாம்.

நன்கொடையாளர்கள் டூ நெட்வொர்க்கில் 1020 அல்லது எடிசலாட் நெட்வொர்க்கில் 1110 என்ற எண்ணுக்கு “meal” அல்லது “وجبة” என SMS அனுப்புவதன் மூலம் மாதாந்திர சந்தா மூலம் ஒரு நாளுக்கு 1 திர்ஹம் நன்கொடை அளிக்கலாம்.

அது மட்டுமல்லாமல் 8009999 என்ற கட்டணமில்லா எண் மூலம் பிரச்சாரத்தின் அழைப்பு மையம் மூலமாகவும் நன்கொடைகளை வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!