அமீரக செய்திகள்

60 ஆண்டுகளை நிறைவு செய்த துபாய் சர்வதேச விமான நிலையம்..!! அரிதான புகைப்படங்கள் உள்ளே..!!

உலகளவில் அதிகளவிலான விமான சேவைகள் இயக்கப்பட்டு வரும் விமான நிலையங்களில் ஒன்றான அமீரகத்தின் துபாய் விமான நிலையம் திறக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்று தற்பொழுது 61 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. உலகெங்கிலும் இருந்து பல மில்லியன் பயணிகளை கையாளும் துபாய் விமான நிலையமானது முதன் முதலில் 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, துபாய் விமான நிலையத்தில் ஓடுபாதையைத் தவிர வேறில்லை. துபாய் விமான நிலையத்தின் முதல் ஓடுபாதையின் புகைப்படம்

 

செப்டம்பர் 30, 1960 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்து இது வரையிலும் உலகெங்கிலும் உள்ள 95 நாடுகளில் 240 க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து 7.47 மில்லியனுக்கும் அதிகமான விமானங்களில் பயணித்த 1.115 பில்லியன் சர்வதேச பயணிகளுக்கு துபாய் சர்வதேச விமான நிலையம் தனது சேவையை வழங்கியுள்ளது.

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் 60 ஆண்டுகள் சாதனையில் 2000 ஆம் ஆண்டில் ஷேக் ரஷீத் டெர்மினல் திறக்கப்பட்டபோது கட்டப்பட்ட மிகப்பெரிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் (ATC), உலகில் முதலாவதாக 2002 ஆம் ஆண்டு மின்னணு நுழைவாயில் (E-GATE) நிறுவியது, 2008 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய விமான நிலைய டெர்மினலை (டெர்மினல் 3) திறந்தது, 2011 ஆம் ஆண்டு ஏர்பஸ் 380 (Airbus 380) எனும் பெரிய அளவிலான இரண்டடுக்கு விமானத்திற்காக பிரத்தியேக கான்கோர்ஸ் அமைத்தது உள்ளிட்டவைகளும் அடங்கும்.

மேலும் 2014 ஆம் ஆண்டு உலகளவில் ஒரு ஆண்டில் அதிகளவிலான பயணிகளை கையாண்டதன் மூலம், உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையம் எனும் சிறப்பையும் பெற்றது. 60 ஆண்டு காலமாக சேவையை வழங்கி வந்த துபாய் சர்வதேச விமான நிலையம் கடந்த 2008 ஆம் ஆண்டு தனது பில்லியன் பயணிகள் எனும் மைல்கல்லை எட்டியதும் குறிப்பிடத்தக்கது.

1971 இல் துபாய் சர்வதேச விமான நிலையம். வாரத்திற்கு 4-5 விமானங்கள் மற்றும் ஆண்டுக்கு 40,000 பயணிகள் மட்டுமே, விமான நிலையம் இன்று ஒரு மாதத்திற்கு 34,000 விமானங்களையும் ஆண்டுக்கு 88.8 மில்லியன் பயணிகளையும் கையாளுகிறது.

60 ஆண்டு கால நிறைவை தொடர்ந்து துபாய் விமான நிலையங்களின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் கூறுகையில், “மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் விமான போக்குவரத்தின் திறனைப் புரிந்து கொண்டார் மற்றும் விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் திறந்த வான்வெளி கொள்கையை ஊக்குவிப்பதற்கும் தொலைநோக்குடன் செயல்பட்டார். பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஷேக் ரஷீத் அவர்களின் தொலைநோக்கு பார்வையை வலுவாக முன்னோக்கி கொண்டு சென்றார். அவர் துபாய் சர்வதேச விமான நிலையத்தை உலகளவில் தலை சிறந்த விமான நிலையமாக திறம்பட நிலைநிறுத்தினார்”.

1970 இல் விமான நிலையத்தில் டெர்மினல் பகுதி கட்டப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட பழைய துபாய் சர்வதேச விமான நிலையத்தின் புகைப்படம்

மேலும் விமான நிலைய வரலாற்றில் சிறந்த இடத்தை அடைந்திருக்கும் துபாய் சர்வதேச விமான நிலையம், தொலைநோக்கு பார்வை, முற்போக்கு சிந்தனை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் மிகப்பெரிய விஷயங்களை அடைய முடியும் என்பதற்கு பெரிய சான்றாகும் என்றும் துபாய் விமான நிலையங்களின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார். அடுத்த அரை நூற்றாண்டில், உலகை இணைப்பதில் மற்றும் துபாயின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் எங்கள் பங்கை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறும் பயணிகள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!