அமீரக செய்திகள்

மாற்றத்திற்கு தயாராகும் துபாய் ஃபிரேம்.. புதிய அம்சங்களை புகுத்த இருப்பதாக RTA அறிவிப்பு.. பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் தகவல்..!!

துபாயின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ’துபாய் ஃபிரேம்’ வெகுவிரைவில் புதுப்பிக்கப்பட உள்ளதாக, துபாய் முனிசிபாலிட்டியின் பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் துறையின் தலைவர் அஹ்மத் இப்ராஹிம் அல்ஜரோனி் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய அரேபியன் டிராவல் மார்ட்டில் (ATM) தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் இதுவரை பார்த்த துபாய் ஃபிரேமில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், இன்னும் 50 ஆண்டுகளில் துபாய் நகரம் எப்படி இருக்கும் என்பதை பார்வையாளர்களுக்கு காண்பிக்கும் வகையில் பல புதுமைகளுடன் மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

துபாய் ஃபிரேம் என்பது பழைய மற்றும் புதிய துபாயின் ஈர்க்கக்கூடிய காட்சிகளை ‘ஃபிரேம்’ செய்யும் ஒரு ஐகானிக் அமைப்பாகும். ஜபீல் பூங்காவிற்கு உள்ளே 150 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஃபிரேம், ஒருபுறம், இது நகரத்தின் வளமான கடந்த காலத்தைப் பற்றிய ஒரு பார்வையையும், மறுபுறம் அதன் பளபளப்பான மற்றும் அற்புதமான நிகழ்காலத்தையும் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தும்.

மெஸ்ஸனைன் தளம் (Mezzanine floor)

துபாய் ஃபிரேமின் மெஸ்ஸனைன் தளத்தில், ஒரு சிறிய மீன்பிடி கிராமத்திலிருந்து வணிக மையமாக மாறிய துபாயின் வளர்ச்சியைக் காணலாம். அதே தளத்தில் எதிர்கால துபாய் கண்காட்சியும் காட்சிப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இது இந்த பிரபலமான இடத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இது மிகவும் தனித்துவமான அனுபவமாக இருக்கும் என்று குறிப்பிட்ட அல்ஜரோனி, ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் பார்வைக்கு ஏற்ப 50 ஆண்டுகளுக்குப் பிறகு துபாய் எப்படி இருக்கும் என்பதை இது முற்றிலும் காட்டக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், துபாய் ஃபிரேமின் எதிர்காலக் கண்காட்சியானது ஒரு சிறப்பு ஆடியோ காட்சிகள் மற்றும் எஃபெக்ட்களுடன் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு பணிகள்:

அல்ஜரோனியின் கூற்றுப்படி, ஒரு முழுமையான புதுப்பித்தலுக்கு உள்ளாகும் துபாய் ஃபிரேம், அடுத்த ஆண்டின் கடைசி காலாண்டில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்து, புதுப்பொலிவுடன் விரைவில் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதுப்பித்தல் பணிகள் தொடங்கும் போது மெஸ்ஸனைன் தளத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவித்ததுடன், மற்ற பெரும்பாலான பகுதிகள் பார்வையாளர்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மட்டும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் துபாய் ஃபிரேமை பார்வையிட்டுள்ளனர். மேலும் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகப் பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!