அமீரக செய்திகள்

கோடை காலங்களில் வாகனம் அடிக்கடி தீ பிடிக்க காரணம் என்ன?? தவிர்ப்பது எப்படி?? துபாய் காவல்துறையின் விளக்கம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை காலம் ஆரம்பித்தை முன்னிட்டு வாகனம் தீப்பிடிப்பதற்கான பல்வேறு காரணங்களை துபாய் காவல்துறை பட்டியலிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை தவறாமல் பரிசோதிக்குமாறு துபாய் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

துபாய் காவல்துறையின் பொது போக்குவரத்துத் துறையின் இயக்குனர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் அவர்கள், கோடை காலங்களில் வாகன தீ விபத்துக்கள் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

தங்களது ஆலோசனையில், பிரேக்டவுன் அல்லது தீ விபத்துகளைத் தவிர்ப்பதற்காக புகழ்பெற்ற ஏஜென்சிகளில் தங்கள் வாகனங்கள் வழக்கமான பராமரிப்பு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு வாகன ஓட்டிகளை காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் “வாகனத்தின் வழக்கமான பராமரிப்பை உறுதி செய்வதன் மூலமும், சேதமடைந்த பகுதிகளை புதியவையாக குறிப்பாக என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் வயர் தொடர்பானவற்றை மாற்றுவதன் மூலமும் இந்த அசம்பாவிதத்தை தவிர்க்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

வாகன பராமரிப்பை புறக்கணிப்பது அல்லது தரமற்ற ரிப்பேர் கடைகளை  நாடுவது வாகன தீ விபத்துகளுக்கு முக்கிய காரணங்கள் என்று அதிகாரி விளக்கியுள்ளார்.

மேலும் ஓட்டுனர்கள் எரியக்கூடிய எந்தவொரு பொருளையும் காருக்குள் விடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் சானிடைசர்களும் அடங்கும்.

வாகன தீ விபத்துக்கான மற்றொரு முக்கிய காரணம் எரிபொருள், எண்ணெய் அல்லது என்ஜின் குளிரூட்டும் நீர் போன்ற கசிவுகளைக் கண்டறியாமலோ அல்லது அதனை சரி செய்யாமலோ இருப்பதாகும்.

தகுதியற்ற மெக்கானிக்குகளை மின் பாகங்களை ஆய்வு செய்ய விடுவது அல்லது புதிய மின் இணைப்புகளை முறையற்ற முறையில் சேர்ப்பது வாகன தீ விபத்துக்கான மற்றொரு காரணம் ஆகும்.

அதே போல், வாகன டயர்களின் சேதங்களை ஆய்வு செய்யாததும் போக்குவரத்து விபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணம் என்று பிரிகேடியர் அல் மஸ்ரூய் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “நீங்கள் எப்போது அல்லது எங்கு வாகனம் ஓட்டுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. வேகம் அல்லது நிபந்தனைகள் எதுவாக இருந்தாலும், சாலையுடன் ஒரு ஓட்டுநருக்கு உண்டான தொடர்பு டயர்கள் மட்டுமே. இதனால், கோடை காலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​வாகனத்தை வழக்கமாக சோதனையிடுவது மிகவும் அவசியமாகின்றன. மேலும் டயர்களை வழக்கமான காற்று அழுத்த சோதனைகளையும் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!