அமீரக செய்திகள்

UAE: இரு மாதங்களாக கொரோனா தொடர்பான ஒரு மரணம் கூட நிகழவில்லை..!! சுகாதார அமைச்சகம் தகவல்..!!

அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தால் (MoHAP) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, மார்ச் 7 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பால் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் முதல் சராசரியாக 400 க்கும் அதிகமான பாதிப்புகள் தினசரி பதிவாகி வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக 200 க்கும் குறைவாகவே புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

நேற்று, அமைச்சகம் 198 புதிய நோய்த்தொற்று பாதிப்புகளை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 899,835 ஆக இருக்கின்றது.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், நாட்டில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2,302 என இரண்டு மாதங்களாக மாறாமல் உள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனை மற்றும் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றால் பாதிப்புகள் குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

துபாயில் உள்ள ஜெபல் அலியின் அஸ்தெர் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவ நிபுணர் டாக்டர் அயாஸ் அகமது கூறுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொற்றுநோய்க்கு எதிரான அயராத மற்றும் அசைக்க முடியாத போராட்டத்திற்குப் பிறகு, நாடு இப்போது இயல்பு நிலைக்கு முன்னேறி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பால் மரணம் பதிவாகி இரண்டு மாதங்கள் ஆகின்றன. கொரோனா பாதிப்புகளும் வெகுவாக குறைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை வரை, தகுதியான மக்களில் 97.74 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!