அமீரக செய்திகள்

துபாய்: புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த ‘தமிழ்’..!! காதுகளுக்கு இனிமை சேர்த்த ‘செம்மொழியான தமிழ்மொழியாம்” பாடல்…!!

துபாயில் தமிழ் எழுத்துக்களுடன் தமிழ் கலாச்சாரத்தை காட்டும் வகையில் ஒரு வீடியோவானது உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் வெளியிடப்பட்டுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 -ல் இருக்கும் இந்தியன் பெவிலியனில் சிறப்பு நிகழ்வுகள் அடங்கிய தமிழக அரங்கை திறந்து வைக்கவும் சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்க்கவும் நான்கு நாட்கள் பயணமாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தற்பொழுது துபாய் வந்துள்ளார்.

துபாய் வந்தடைந்த அவருக்கு மிக சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாய் வந்தடைந்த அவர் எக்ஸ்போவில் தமிழக அரங்கை திறந்து வைத்துள்ளார். எக்ஸ்போவில் அமைக்கப்பெற்றுள்ள தமிழக அரங்கிற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழக கலாச்சாரம், சுற்றுலா, விவசாயம் உள்ளிட்ட துறை சார்பாக நிகழ்வுகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமீரகத்தின் அமைச்சர்களை சந்தித்து பேசிய பிறகு, “’நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மற்றும் அயலக வர்த்தகத் துறையின் இணை அமைச்சருடனான சந்திப்பில் வலுப்பெற்றது. தமிழக-அமீரக உறவைப் போல வலுவானதாகச் சந்திப்பு அமைந்தது” என தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எக்ஸ்போவில் AR ரஹ்மானின் ஃபிர்தவுஸ் ஸ்டூடியோக்கு சென்று AR ரஹ்மானை சந்தித்துள்ளார். அங்கு AR ரஹ்மான் முதல்வருக்கு தான் தயாரித்துள்ள “மூப்பில்லா தமிழே தாயே” ஆல்பத்தை காண்பித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு புர்ஜ் கலீஃபாவில் தமிழ் எழுத்துக்களுடனும் தொன்மை வாய்ந்த தமிழ் கலாச்சாரத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் AR ரஹ்மான் இசையில் அமைக்கப்பட்ட செம்மொழியான தமிழ்மொழியாம் பாடல் பின்னணியில் ஒலிக்க அற்புதமான வீடியோ காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இதனை கண்ட துபாய் வாழ் தமிழர்கள் அனைவரும் புர்ஜ் கலீஃபாவில் தமிழ் எழுத்தை காணவும் மிகவும் சிலிர்த்துப் போனதாகவும் பெருமையுடன் உணர்ந்ததாகவும் கூறி வருகிறார்கள்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!