அமீரக செய்திகள்

UAE: காலாவதியான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும் பொதுமன்னிப்பில் இந்தியா செல்ல சிறப்பு திட்டம்..!! இந்திய துணை தூதர் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் வெளிநாட்டவர்களில் மார்ச் 1 ம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசாக்களை கொண்டிருப்பவர்கள் நாடு திரும்ப அமீரக அரசால் தற்போது பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொதுமன்னிப்பின் மூலம் இந்திய நாட்டவர்கள் பலரும் தற்போது விசா விதிமீறல்களுக்கான அபராதம் மற்றும் நுழைவு தடை ஏதுமின்றி அமீரகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், அமீரகத்தில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்திய நாட்டவர்களில், தற்போது காலாவதியான பாஸ்போர்ட்டினை கொண்டிருப்பவர்களும் இந்த பொதுமன்னிப்பை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இல்லாதவர்களும் இந்தியா திரும்புவதற்கான ஒரு முறை பயன்பாட்டு “இலவச அவசர பயண சான்றிதழ் (Free Emergency Travel Certificate)” வழங்கப்பட்டு வருவதாகவும் இந்திய துணை தூதர் அமன் பூரி தெரிவித்துள்ளார். காலாவதியான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்திய துணை தூதரகத்திலிருந்து இந்த “இலவச அவசர பயண சான்றிதழை” பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் நீரஜ் அகர்வால் கூறுகையில், தூதரகம் அறிவித்துள்ள இந்த இலவச அவசர பயண சான்றிதழை பெற விரும்புபவர்கள், தங்களின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பழைய பாஸ்போர்ட்டின் நகல் அல்லது பாஸ்போர்ட் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒரு விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இந்த விண்ணப்பங்களை அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவைகளை வழங்கக்கூடிய BLS சென்டரில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

பாஸ்போர்ட்டின் நகல் அல்லது பாஸ்போர்ட் எண் குறித்த தகவல்கள் இல்லாதவர்களுக்கு அவர்கள் இந்திய குடிமக்கள்தானா என்பதை அறிந்துகொள்ள சிறப்பு சரிபார்ப்பு செயல்முறை பின்பற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுபோன்ற 1,000 இலவச அவசர பயண சான்றிதழ்களை இந்திய தூதரகம் வழங்கியுள்ளதாகவும் நீரஜ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமன் பூரி கூறுகையில், தூதரகத்தின் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 30 முதல் 40 இலவச அவசர பயண சான்றிதழ்களை வெளியிடுவதாகவும், நவம்பர் 17 ஆம் தேதி வரையிலும் வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பின் மூலம் அமீரக அரசாங்கத்திடமிருந்து அபராதம் தள்ளுபடி திட்டத்தை, விசா விதிமீறல்களில் ஈடுபட்ட அனைத்து இந்தியர்களும் பெற முடியும் என்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக டாக்டர் அமன் பூரி கூறியுள்ளார். மேலும் இந்த சேவை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!