கொரோனாவால் சீனாவை விட அதிகளவில் உயிரிழப்புகளை சந்தித்த நாடு…!!! மக்கள் அச்சம்..!!!
கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமியான கொரோனா வைரஸிற்கு தற்பொழுது உலகமே பயந்து நடுங்கி கொண்டிருக்கிறது. உலகிலிருக்கும் எந்தவொரு வல்லரசு நாட்டினாலும் கூட கொரோனாவிற்கு எதிரான மருந்து இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் கொரோனாவிற்கு பல பேர் பாதிக்கப்பட்டும் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர்.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கிய நோயானது தற்பொழுது உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது. வைரஸ் தோன்றிய இடமான சீனாவிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் கொரோனாவிற்கு தற்பொழுது சீனாவை விட இத்தாலி நாட்டு மக்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலகிலுள்ள அனைத்து நாடுகளும் மிகவும் நெருக்கடியான சூழலை சமுதாய அளவிலும், பொருளாதார அளவிலும் சந்தித்து வருகிறது.
பல்வேறு நாடுகள் பல விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமே உள்ளன. நிலைமை மிக மோசமானதைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், தென்கொரியா ஆகிய நாடுகள் ராணுவத்தை களம் இறக்கியுள்ளன.
வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு நாளில் மட்டும் இத்தாலியில் மொத்தம் 427 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன்படி, இத்தாலியில் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருவர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. இதனால் இத்தாலியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,405 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் உருவாகிய இடமான சீனாவில் மொத்தம் 3,248 இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையை விட குறைவாகும். இதுவரை இத்தாலியில் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 40,000 க்கும் மேலாக உள்ளது.
இத்தாலியில் நாடு தழுவிய தனிமைப்படுத்தலைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். மிக அவசியத் தேவையின்றி எவரும் வெளியில் வர வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, அனைவரும் வீட்டிலேயே பொழுதைக் கழிக்கின்றனர். மேலும், பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்தும் அங்கு மூடப்பட்டுள்ளது. வீடுகளில் அடைபட்டிற்கும் மக்கள் கைதட்டியும், ஆரவாரம் செய்தும் தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட போராடி வருகின்றனர்.
ஏறக்குறைய 2,28,000 நோய்த்தொற்றுகள் மற்றும் 9,200 க்கும் மேற்பட்ட இறப்புகளுடன், இந்த தொற்றுநோய் உலகையே திகைக்க வைத்துள்ளது. இரண்டாம் உலகப் போர், 2008 நிதி நெருக்கடி மற்றும் 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் போன்ற கஷ்டமான காலங்களுக்கு பிறகு, இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு மற்றுமொரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உலகளவில் பார்க்கப்படுகிறது.