கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்டின் பரிதாப நிலை..!!! நோயாளிகள் தங்கள் வீடுகளிலேயே உயிரிழக்கும் அவலம்..!!!
உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்த நாடுகளில் ஒன்று இத்தாலி. இன்று வரையிலும் இத்தாலியில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தற்பொழுது வரை, இத்தாலியில் 125,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15,300 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல நோயாளிகளுக்கு முதலுதவி கூட கிடைக்க வாய்ப்பில்லாமல் தங்கள் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், வயதான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் அளித்து வருகின்றனர். இவ்வாறு செல்பவர்களுக்கு தற்காப்பிற்கென போதிய உபகரணங்கள் கிடைக்காதலால், இதனையொட்டி மருத்துவர்களும் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து கொண்டே தொலை பேசி வழியாக மருத்துவ வழிமுறைகளை கூறும் பரிதாபமான நிலையும் அங்கு நிலவி வருகிறது. இந்த முறைகளை பின்பற்றினாலும் அந்த நாட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லை. எனவே, லேசான கொரோனா அறிகுறி உடையவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை குறித்து இத்தாலி மருத்துவர் ஒருவர் கூறுகையில், “பல நோயாளிகள் உதவி கிடைக்காமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு நிலைமை மோசமடைந்தால் மட்டும் மருத்துவர் வீட்டிற்கு சிகிச்சை அளிக்க செல்கிறார்கள். அதற்குள் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது. மேலும், பல நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லாததற்கு காரணம் மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாதது மட்டும் இன்றி அங்கு போதிய மருத்துவர்களே இல்லாததும் காரணம் ஆகும்” என்று கூறியுள்ளார். இதனால் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாமலும், போதிய மருத்துவம் கிடைக்காமலும் எந்த உதவியுமின்றி வீட்டிலேயே உயிரிழக்கும் அவல நிலை அங்கு உருவாகியுள்ளது.