வந்தே பாரத் 4 ம் கட்டம் ஜூலை 3 முதல் தொடங்கும்..!! வளைகுடா, மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தகவல்..!!
வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் வந்தே பாரத் திட்டத்தின் 3 ம் கட்டம் வரும் ஜூலை 2 ஆம் தேதியுடன் முடியவிருக்கும் நிலையில், நான்காவது கட்டம் தொடங்குவது தொடர்பான அறிவிப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி ஜூலை 3 ம் தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தின் நான்காவது கட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, “ஜூலை 3 முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை திருப்பி அனுப்புவதற்காக வந்தே பாரத்தின் நான்காவது கட்டத்தை தொடங்குவதற்கான திட்டங்களை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த நான்காவது கட்டத்தில் குறிப்பாக இந்தியாவிற்கு திரும்பி வருவதற்கு தூதரகங்களில் பதிவு செய்துள்ள ஏராளமான இந்திய குடிமக்களைக் கொண்ட வளைகுடா நாடுகள், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படாத பிற நாடுகளிலிருந்து, விமான நிறுவனங்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய, இருதரப்பு ஏற்பாடுகளை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அரசு எடுத்துள்ள முடிவை பின்பற்றி வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Phase-4 of #VandeBharatMission has been firmed up with effect from July 3. Phase-4 will particularly focus on countries where we still have a large number of Indians who have registered to return: MEA Spokesperson Anurag Shrivastava pic.twitter.com/LWqX7p83NN
— ANI (@ANI) June 25, 2020
கடந்த மாதம் மே 7 ஆம் தேதி முதல் தொடங்கிய வந்தே பாரத் எனும் இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் தற்போது வரையிலும் சுமார் 250,000 இந்திய குடிமக்கள் இந்தியா திரும்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களிடமிருந்து மொத்தம் 4,87,303 திருப்பி அனுப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அதில் 2,63,187 பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் திருப்பிஅனுப்பும் நடவடிக்கை குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மூலமாக ஜூன் 24 ஆம் தேதி வரையிலும், 1414 விமானங்கள் (உள்வரும் மற்றும் வெளிச்செல்லும்) இயக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விமானங்களின் மூலம் மொத்தம் 182,313 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், வந்தே பாரத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட திட்டத்தில் 1,050 விமானங்கள் இயக்க திட்டமிடப்படும் என்றும், அவற்றில் 750 விமானங்கள் இந்தியாவை சேர்ந்த தனியார் விமான நிறுவனங்களால் இயக்கப்படும் என்றும், மற்ற விமானங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் என்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டாலும் அதில் தமிழகத்திற்கு, முந்தைய கட்டங்களில் ஒதுக்கப்பட்டதை போன்று அல்லாமல் கூடுதலாக விமானங்கள் ஒதுக்கப்படுமா என்பதுதான் வளைகுடா நாடுகள், மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கக்கூடிய அனைத்து வெளிநாடு வாழ் தமிழர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என அமீரக வாழ் தமிழர்கள் சார்பாக இந்திய அரசிற்கும் தமிழக அரசிற்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.