ஓமான் : நாளை முதல் ஆரம்பமாகும் கொரோனாவிற்கான தேசிய கணக்கெடுப்பு..!! வெளிநாட்டவர்கள், குடிமக்களின் மாதிரிகள் சேகரிக்கப்படும் என தகவல்..!!
ஓமான் நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தேசிய கணக்கெடுப்பை (serological) ஜூலை 12 நாளை முதல் தொடங்கப்படவுள்ளதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஓமான் நாட்டில் தற்பொழுது வரை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸினால் பாதிப்படைந்த வண்ணமே இருக்கின்றார்கள். அதனை தொடர்ந்து, அந்நாட்டில் கொரோனாவிற்கான தேசிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்தும் முயற்சியில் சுகாதாரத் துறை செயல்படவுள்ளது.
தேசிய கணக்கெடுப்பிற்காக, ஓமான் நாட்டின் குடிமக்கள் மற்றும் அந்நாட்டிலிருக்கும் வெளிநாட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் நேரடியாக தொலைபேசியில் சுகாதாரத் துறை தொடர்பு கொள்ளும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை நம்புமாறும் அமைச்சகம் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, தேசிய கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக 10 வார காலத்திற்குள், ஓமான் நாட்டிலிருக்கும் அனைத்து பகுதிகளிலிருந்தும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கணக்கெடுப்பானது ஐந்து நாட்களில் 5,000 மாதிரிகள் என்ற விகிதத்தில் சுமார் 20,000 மாதிரிகள் சேகரிக்கப்படும் என்றும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 380 முதல் 400 மாதிரிகள் சேகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வயதினருக்கு ஏற்ப நோய்த்தொற்றின் அளவை மதிப்பிடுவது, ஆய்வகத்தில் கண்டறியப்படாத வைரஸ் பாதிப்புகளை கண்காணித்தல், மற்றும் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் நோய்த்தொற்றின் அளவு, அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் நோய்த்தொற்றின் வீதம் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று வழக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஆகியவற்றை மதிப்பிடுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தேசிய கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் வாழ்க்கைத் தரத்தின் தாக்கத்தையும், லாக்டவுன் இல்லாத பகுதிகளுக்கும் லாக்டவுன் அறிவித்திருந்த பகுதிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை ஒப்பிடுதல் போன்றவற்றை தேசிய கணக்கெடுப்பின் மூலம் மதிப்பீடு செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுவரையிலும், ஓமான் நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 50,000 ஐ கடந்துள்ளதும், தினசரி 1000 நபர்களுக்கும் மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.