Repatriation : கத்தார், அமீரகத்திலிருந்து தாயகம் சென்றடைந்த இலங்கையர்கள்..!!
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கே அழைத்து செல்லும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை இலங்கை அரசானது தற்பொழுது மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், கத்தார் நாட்டில் சிக்கித் தவித்த 264 இலங்கையர்களை ஏற்றிக் கொண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளதாக கத்தாரிற்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. பயணிகளில் பெரும்பாலோர் கத்தார் நாட்டில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவித்த 193 இலங்கையர்களையும் தாய்நாட்டிற்கு மீண்டும் அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்த இலங்கையர்கள் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடைந்ததும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்பாக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமான் நாட்டில் சிக்கி தவித்த 290 குடிமக்களை இலங்கை அரசு தாயகத்திற்கு மீட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.