வளைகுடா செய்திகள்

இன்ஜினியரிங் துறை சார்ந்த தனியார் நிறுவனங்களில் 20 சதவீத சவூதி நாட்டவர்களை பணியமர்த்த முடிவு..!! கால அவகாசம் வெளியிட்ட அமைச்சகம்..!!

சவூதி அரேபிய நாட்டில் இருக்கும் இன்ஜினியரிங் துறை சார்ந்த தனியார் நிறுவனங்களில், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இன்ஜினியரிங் துறை சார்ந்த வேலைகளில் 20 சதவீதம் சவூதி நாட்டவர்களை பணியமர்த்த சவூதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த முடிவானது இன்ஜினியரிங் துறை சார்ந்த 117 தொழில்களை உள்ளடக்கும் என்றும், இதன் மூலம் 7000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை சவூதி பட்டதாரிகளுக்கு உருவாக்க முடியும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த துறைகளில் பணியமர்த்தப்படும் சவூதி நாட்டவர்களுக்கு மாத சம்பளம் SR7000 க்கும் குறையாமல் இருக்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

சவூதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் அகமது அல்-ராஜியின் இந்த முடிவானது, பொறியியல் தொழில்களில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து தனியார் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதும், நான்கு அல்லது அதற்கும் குறைவான வெளிநாட்டு பொறியாளர்களை பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு இந்த முடிவு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமைச்சகத்தின் இந்த புதிய முடிவை செயல்படுத்த இன்ஜினியரிங் துறை சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் 18 வார கால அவகாசமும் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சவூதி பொறியியலாளர்களை வேலையில் பணியமர்த்துவதற்காக, தனியார் துறை நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் ஆதரவின் தொகுப்பை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு ஆதரவளித்தல், தேவையான பயிற்சி மற்றும் தகுதி செயல்முறைகளை ஆதரித்தல், சவுதி பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வேலை ஸ்திரத்தன்மை நடைமுறைகளை ஆதரித்தல் மற்றும் பொருத்தமான பணியாளர்களைத் தேடுவது ஆகியவை இந்த தொகுப்பில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!